/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விரகனுார் ரிங் ரோடு ரவுண்டானாவில் போக்குவரத்து மாற்றம்: மகாசிவராத்திரி கூட்டத்தை சமாளித்த நகர், புறநகர் போலீசார்
/
விரகனுார் ரிங் ரோடு ரவுண்டானாவில் போக்குவரத்து மாற்றம்: மகாசிவராத்திரி கூட்டத்தை சமாளித்த நகர், புறநகர் போலீசார்
விரகனுார் ரிங் ரோடு ரவுண்டானாவில் போக்குவரத்து மாற்றம்: மகாசிவராத்திரி கூட்டத்தை சமாளித்த நகர், புறநகர் போலீசார்
விரகனுார் ரிங் ரோடு ரவுண்டானாவில் போக்குவரத்து மாற்றம்: மகாசிவராத்திரி கூட்டத்தை சமாளித்த நகர், புறநகர் போலீசார்
ADDED : பிப் 28, 2025 06:22 AM

ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று குலதெய்வம் கோயிலுக்கு பல்வேறு மாவட்ட மக்கள் வாகனங்களில் புறப்பட்டு செல்வர். தென்மாவட்டங்களில் வசிப்போர் விரகனுார் ரிங் ரோடு ரவுண்டானா வழியாக செல்வது வழக்கம். சில ஆண்டுகளாக இப்பகுதியை ஒரே நேரத்தில் பல நுாறு வாகனங்கள் நான்கு திசைகளிலும் கடந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2 மணி நேரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று நகருக்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தியது. ரவுண்டானா சந்திப்பு மாவட்ட எஸ்.பி., கட்டுப்பாட்டில் உள்ள சிலைமான் போலீஸ் எல்லையில் வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தொடரும் இந்த நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கமிஷனர் லோகநாதன், எஸ்.பி., அரவிந்த் முடிவு செய்து நேற்றுமுன்தினம் களஆய்வு செய்தனர். நகர், புறநகர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விரகனுார் பகுதியில் இருந்து வந்த கனரக வாகனங்கள் ரவுண்டானாவில் வலதுபுறம் திரும்பி நான்குவழிச்சாலைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது. அதற்கு பதில் இடதுபுறம் திரும்பி வைகை பாலத்தை கடந்து சில மீட்டர் துாரம் வரை சென்று வலதுபுறம் திரும்பி மீண்டும் பாலம் வழியாக நான்குவழிச்சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
அதுபோல் ராமேஸ்வரம் நான்குவழிச்சாலையில் இருந்து வந்த வாகனங்கள் நேராக ரவுண்டானாவை கடப்பதற்கு பதில், இடதுபுறம் திரும்பிச் சென்று கல்லம்பல் பாலம் முன்பாக வலதுபுறம் திரும்பி நேராகவோ, வைகை தென்கரை ரோடுக்கு செல்லவோ ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் சீராக ரவுண்டானாவை கடந்துச் சென்றன. இது நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த போக்குவரத்தை மாற்றத்தை நிரந்தரமாக அமல்படுத்தலாம் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
போலீஸ் தரப்பில் கூறுகையில், ''இது தற்காலிக ஏற்பாடுதான். வரவேற்பை பொறுத்து முடிவு செய்யப்படும். அச்சமயத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி கல்லம்பல் பாலம் முன்பாக திரும்புவதற்கு பதில், பாலத்தின் சர்வீஸ் ரோடு வழியாக சென்று வலதுபுறம் திரும்பி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்'' என்றனர்.

