/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மனநலம் பாதித்தவருக்கு சிகிச்சை: உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மனநலம் பாதித்தவருக்கு சிகிச்சை: உயர்நீதிமன்றம் உத்தரவு
மனநலம் பாதித்தவருக்கு சிகிச்சை: உயர்நீதிமன்றம் உத்தரவு
மனநலம் பாதித்தவருக்கு சிகிச்சை: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 12, 2024 06:20 AM

மதுரை : மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது நபரை பராமரிக்க, சிகிச்சை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனு:
என் 20 வயது மகன் தினக்கூலி தொழிலாளி. அவருக்கு கடுமையாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் வன்முறையில் ஈடுபடுகிறார். என்னை மற்றும் அவரது தாயை அடிக்கடி தாக்குகிறார். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக பராமரிக்க நடவடிக்கை கோரி தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குனர், சென்னை கீழ்ப்பாக்கம் மன நல நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: மனுதாரரின் மகனுக்கு 2022 ல் திருநெல்வேலி அரசு மருத்துவமனை மனநலப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அவர் இருமுனையப்பிறழ்வால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனநோய் அறிகுறிகளுடன் திரும்ப திரும்பச் செய்யும் வெறி போன்ற மன எழுச்சி பாதிப்பு உள்ளது. மனுதாரரின் குடும்பத்தினரால் நோயாளியை பராமரிக்க இயலவில்லை. நோயாளியின் தாயுடன் பேசினேன்.
நெஞ்சை பதறவைத்தது. எந்த தாயும் மகனை பிரிந்து செல்ல விரும்புவதில்லை. ஆனால் மகனின் வன்முறையை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என தாய் கூறினார்.
மனுதாரரின் மகனை தகுந்த இடத்தில் தங்க வைத்து பராமரிக்க, அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை அளிக்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குனர், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, திருநெல்வேலி அரசு மருத்துவமனை டீன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஏற்பாடு நோயாளி 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட தகுதியானவராக உறுதி செய்யும் தருணத்தில் நிறுத்தப்படும்.
குடும்ப ஆதரவு இல்லாத மனநலம் குன்றியவர்களின் விஷயத்தில் அரசு தனது அதிகார வரம்பை பயன்படுத்தலாம். பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கலாம். மனநலம் குன்றியவர்கள் தங்குவதற்கான இல்லத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க அரசு கடமைப்பட்டுள்ளது. இதுபோன்ற தங்குமிடங்களை அமைக்க அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அதில் தங்குவோர் கண்ணியமாக வாழ, மருத்துவ வசதிகளை பெற அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். அந்நிறுவனங்களுக்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்வது அரசின் கடமை. அரசு கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிடும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு உத்தரவிட்டார்.