ADDED : மே 23, 2024 03:35 AM
சென்னையை அடுத்து லாபத்தில் இயங்கி வந்த மதுரை ஆவின் யூனிட், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது. குறிப்பாக தேவைக்கு அதிகமான பொருட்கள் கொள்முதல் செய்து இருப்பு வைப்பது, உபகரணங்கள் வாங்குவது, பணி நியமனங்களில் முறைகேடு, பால் கொள்முதல் குறைவு, ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னைகள் ஏற்பட்டன.
அதை சமாளிக்க மனமில்லாத அதிகாரிகளாலும் ஓராண்டிற்கு முன்பு வரை ரூ.3.50 கோடி நஷ்டத்திற்கு சென்றது. உற்பத்தியாளர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாததால் நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படும் பால் அளவும் 1.60 லட்சம் லிட்டரில் இருந்து 1.20 லட்சம் லிட்டராக குறைந்தது. இந்நிலையில் சில மாதங்களாக பால் கொள்முதல் அதிகரித்தும், ரூ.4.50 கோடி லாபம் ஈட்டியும் ஆவின் முன்னேற்றம் அடைந்துள்ளது.
பொதுமேலாளர் சிவகாமி கூறியதாவது:
ஆவின் அலுவலர்கள் ஒத்துழைப்புடன் நஷ்டத்திற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தேவையற்ற செலவுகள் குறைக்கப்பட்டன. தேவைக்கு ஏற்ப உபகரணங்கள் கொள்முதல் செய்ய முடிவானது. பழுது ஏற்படும் உபகரணங்களுக்கு பதில் புதிதாக வாங்குவதை தவிர்த்து பழுதுநீக்கி பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதுபோல் மொத்த பால் குளிர்விப்பு மையங்களுக்கு (பி.எம்.சி.,கள்) 17 'ரூட்'டுகள் மூலம் பால் சேகரித்து கொண்டு வரப்பட்டது. அவற்றை 13 'ரூட்'டுகளாக குறைக்கப்பட்டது.
ஆனாலும் 17 'ரூட்'டுக்கான பால் அளவை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிக மின்செலவினம் ஏற்படுத்தும் 3 கோல்டு ரூம்களில் பயன்பாடுகளை பால் அளவுக்கு ஏற்ப இரண்டு மட்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு கொள்முதல், டிரான்ஸ்போர்ட், மின்சிக்கனம், நிர்வாக செலவினங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டதால் மாதம் ரூ. பல லட்சம் வீண் செலவுகள் தவிர்க்கப்பட்டன. அதேநேரம் பால் கொள்முதல், விற்பனையிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இதன் மூலம் ரூ.3.50 கோடி நஷ்டத்தில் இருந்து மீட்டு தற்போது ரூ.4.50 கோடி லாபத்தை ஆவின் எட்டியுள்ளது. உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் அளவும் நாள் ஒன்றுக்கு 1.48 லட்சம் லிட்., உயர்ந்துள்ளது என்றார்.

