/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எடை... 'தடை'... : கருவிகளை முத்திரையிட வழியில்லை: சிறு வியாபாரிகள், நிறுவனங்கள் தவிப்பு
/
எடை... 'தடை'... : கருவிகளை முத்திரையிட வழியில்லை: சிறு வியாபாரிகள், நிறுவனங்கள் தவிப்பு
எடை... 'தடை'... : கருவிகளை முத்திரையிட வழியில்லை: சிறு வியாபாரிகள், நிறுவனங்கள் தவிப்பு
எடை... 'தடை'... : கருவிகளை முத்திரையிட வழியில்லை: சிறு வியாபாரிகள், நிறுவனங்கள் தவிப்பு
ADDED : ஜூன் 14, 2024 05:11 AM

மதுரை, ஜூன் 14- மதுரையில் தராசுகளை முத்திரையிடுவதற்கு 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வழியின்றி வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.
வியாபாரிகள் வர்த்தகத்திற்கு பயன்படுத்தும் நிறுத்தல் அளவைகளான தராசுகள், மின்னணு எடையளவை கருவிகள் அனைத்தும் தொழிலாளர் நலத்துறையில் ஆண்டுதோறும் முத்திரை வைப்பது கட்டாயம்.
சிறுவியாபாரிகள் முதல் பெரிய அளவில் வர்த்தகம் செய்வோர் அனைவரும் இதை கடைபிடித்தாக வேண்டும். இதற்கு ரூ.100 முதல் ரூ. 6 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
சிறு வியாபாரிகள் நேரில் சென்று தராசு, படிக்கற்களுக்கு முத்திரை வைத்து வருவர். பெருநிறுவனங்கள் அளவீடு செய்ய விண்ணப்பித்ததும், அதிகாரிகள் அந்நிறுவனங்களுக்கு சென்று அவற்றை சரிபார்த்து முத்திரையிடுவர். இத்தகைய விண்ணப்பத்தை சில ஆண்டுகளாக இணையதளம் மூலம் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க அரசு உத்தரவிட்டது.
இந்தாண்டு எடையளவு கருவிகளை முத்திரையிடுவதற்கு ஜூன் 30 கடைசி நாள். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் மாநில அளவில் வியாபாரிகள் தவிக்கின்றனர்.
காரணம் இணையதளம் (போர்ட்டல்) முடங்கி இருப்பதே அதற்கு காரணம். 'வைரஸ் பாதிப்பு' ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கருதுகின்றனர். மதுரை மாவட்டத்தில் முத்திரையிடுவதற்கென தொழிலாளர் நலத்துறையில் 130 ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்கள் தினமும் பத்தாயிரம் தராசு, எடையளவு கருவிகளை ஆய்வு செய்து முத்திரையிடுவர்.
இணையதளம் முடங்கியிருப்பதால் விண்ணப்பிக்க முடியாமல், சிறு, பெரு வியாபாரிகள் மட்டுமின்றி, உரிமம் பெற்ற தராசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களும் தொழில் முடங்கியிருப்பதாக வேதனைப்படுகின்றனர். விண்ணப்பிக்கும் காலம் முடிந்து, ஜூலை துவங்கிவிட்டால் விண்ணப்பிப்போருக்கு அபராதம் வசூலிக்கப்படும். எனவே வியாபாரிகள் பதற்றத்துடன் உள்ளனர்.
தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, ''இணையதள போர்ட்டலில் பராமரிப்பு நடப்பதால் அதன் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற நிலையில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று அறிவிக்க வாய்ப்புள்ளதால் வியாபாரிகள் கவலைப்படத் தேவையில்லை'' என்றார்.