/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கடன் தந்தவர்கள் மிரட்டல் கலெக்டரிடம் பெண் புகார்
/
கடன் தந்தவர்கள் மிரட்டல் கலெக்டரிடம் பெண் புகார்
ADDED : மார் 11, 2025 05:23 AM

மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான மக்கள் மனு கொடுத்தனர். மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற 37 மாணவர்களை கலெக்டர் பாராட்டினார்.
கூடக்கோயிலைச் சேர்ந்த சித்ராதேவி என்பவர் மனு கொடுத்து கூறியதாவது: சில மகளிர் குழுக்களில் கடன் பெற்றேன். முறையாக கடனை செலுத்தியும், ஓரிரு வாரங்கள் வட்டி தாமதமான நிலையில் சிலர் வீட்டுக்கே வந்து மிரட்டுகின்றனர். இரவு 10:00 மணி வரை வீட்டில் இருந்து கொண்டு வெளியேறாமல் அச்சுறுத்துகின்றனர். எனது 2 மகன்களுக்கு காதுகேட்கும் கருவி, சிகிச்சைக்காக பெற்ற கடனை விரைவில் அடைத்துவிடுவேன். ஆனாலும் வாழவிடாமல் பயமுறுத்துகின்றனர். கலெக்டரிடம் மனு கொடுத்தேன். அவர் எனது மகன்களுக்கு காதுகேட்கும் கருவிக்கு ஏற்பாடு செய்ய உடனே நடவடிக்கை எடுத்தார். எஸ்.பி.,யிடம் கூறி பாதுகாப்புக்கும் நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார்.
வலைசேரிபட்டி சமூகஆர்வலர் சரவணன் மனு: தனியார் பள்ளி மாணவர்கள் மூன்றாவதாக விருப்பமொழியை பயின்று, உலக நாடுகள், பிற மாநிலங்களுக்கு சென்று வாழ்க்கை தரத்தை உயர்த்துகின்றனர். இந்த வாய்ப்பு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் இந்தவாய்ப்பு உள்ளது. அதனை அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க செய்ய வேண்டும், எனத்தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் பொன்னமங்கலம் பகுதி விவசாயிகள் மனு: அழகுசிறை கிராம கொள்முதல் மையத்தில் 130 விவசாயிகளிடம் 15 ஆயிரத்துக்கும் கூடுதலான நெல்மூடைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இப்பகுதியை சேராதவர்களுக்குரியவை. இம்மையத்தில் 680 டன் கொள்முதல் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் இன்னும் 300 ஏக்கருக்கும் மேல் நெல் அறுவடையாகாமல் உள்ளது.எனவே மையத்தை நீட்டிப்பு செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.