ADDED : மே 06, 2026 05:51 PM
இளைஞர்களுக்கு வேலை பா.ரவிக்குமார், பட்ட மேற்படிப்பு மாணவர் மாற்றம் வேண்டும் என்பதால் விஜய் வெற்றி பெற்றுள்ளார். திராவிட கட்சிகள் செய்யாத விஷயங்களையே அவரிடம் எதிர்பார்ப்பர். அதனால் 200 யூனிட் மின்சாரம், ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசம் என்பன போன்றவற்றை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வர் எனத் தெரியவில்லை. முந்தைய ஆட்சிகளைப் போன்று இல்லாமல், ஊழலற்ற நிர்வாகம், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும். இளைஞர்களால் ஆட்சிக்கு வந்துள்ள அவர், வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கல்வி, மருத்துவத்தில் கவனம் செலுத்தி ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்த வேண்டும். உள்ளாட்சிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
கூட்டணி ஆட்சியால் சிறப்பு எஸ். ஷர்மிளா, இல்லத்தரசி புதிய ஆட்சியில் முதல்வர் விஜய் ஊழலற்ற நிர்வாகம், பெண்களுக்கு பாதுகாப்பு என்பதில் ரெம்ப முக்கியத்துவம் தந்து ஆட்சி நடத்த வேண்டும். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் வாய்ப்பு தந்துள்ளனர். எனவே மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்த எதிர்பார்க்கிறோம். ஆட்சிக்கு தனிமெஜாரிட்டி கிடைக்கவில்லைதான். முதன்முறையாக கூட்டணி ஆட்சியாகத்தான் நடக்க உள்ளது. இதுவும் ஒருவகையில் நல்லதுதான். இதனால் மக்கள் நலத்தில் அக்கறை கொண்டு ஆட்சியை கவனமுடன் நடத்துவர்.
தமிழகம் முன்னணியில் வரவேண்டும் எஸ்.சுரேஷ், கல்லுாரி, மாணவர் லஞ்ச, ஊழலுக்கு இடமின்றி, உண்மையான பாமர மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாக உள்ள விஜய், மாணவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும். குறிப்பாக வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தொழில் வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு, மதுபோதையில்லாத தமிழகம் உருவாக பாடுபட வேண்டும். கனிமவளம் உள்ளிட்ட இயற்கை வளங்களை பயன்படுத்தி தமிழகம் முன்னணியில் வர ஆக்கபூர்வமாக உழைக்க வேண்டும்.
