/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நுாறுநாள் பணியாளர்களுக்கு 60 நாட்களாக சம்பளமில்லை
/
நுாறுநாள் பணியாளர்களுக்கு 60 நாட்களாக சம்பளமில்லை
ADDED : ஜன 27, 2025 04:52 AM

பேரையூர் :   100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
100 நாள் வேலைத்திட்டம் கடந்த 2008 முதல் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. வேலை செய்யும் திறன் கொண்ட அனைவரும் இத்திட்டத்தில் வேலை பெற தகுதி உடையவர்கள். அதே ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும். எந்த ஒரு சாதாரண உடல் உழைப்பிலான வேலையை செய்வதற்கும் விருப்பம் உடையவராக இருக்க வேண்டும்.
18 வயது நிரம்பிய ஆண் பெண் இருபாலரும் வேலை பெற தகுதி உடையவர்கள். வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் வேலை பெற தகுதியானவர்கள்.  இதில் பணியாற்றும் ஆண் பெண் இருபாலருக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.319  சம்பளம் வழங்கப்படுகிறது.
தற்போது தேசிய மின்னணு நிதி மேலாண்மை முறை வாயிலாக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்படுகிறது.  15 நாட்களுக்குள் ஊதிய தொகை வழங்குதல் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆனால் மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 420 ஊராட்சிகளில்  கடந்த 2 மாதமாக 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதனால் இதில் வேலை செய்யும் பணியாளர்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

