100 நாட்களில் நுாறு சதவீதம் அடிப்படை வசதிகள்: மதுரை கிழக்கு த.வெ.க., வேட்பாளர் கார்த்திகேயன் பிரசாரம்
100 நாட்களில் நுாறு சதவீதம் அடிப்படை வசதிகள்: மதுரை கிழக்கு த.வெ.க., வேட்பாளர் கார்த்திகேயன் பிரசாரம்
ADDED : ஏப் 13, 2026 11:40 PM

மதுரை: 'மதுரை கிழக்கு தொகுதியில் த.வெ.க., வெற்றி பெற்றால் அனைத்து கிராமங்களில் 100 நாட்களில் நுாறு சதவீதம் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்' என த.வெ.க., வேட்பாளர் கார்த்திகேயன் உறுதியளித்தார்.
இத்தொகுதிக்கு உட்பட்ட ஆனையூரில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின் இடையபட்டி, பரசுராம்பட்டி, ஜி.ஆர்., நகர், கனகவேல்நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் 'விசில்' ஊதியும் வேட்பாளரை வரவேற்றனர்.
அப்போது அவர் பேசியதாவது: கிழக்கு தொகுதியில் ஏராளமான கிராமங்களில் அடிப்படை வசதிகள் இன்னும் இல்லாத நிலை உள்ளது. அதிக கிராமங்களில் தெரு விளக்குகள் இல்லை, சாக்கடை வசதிகள் இல்லை என புகார்கள் வருகின்றன. இரவு நேரத்தில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.
த.வெ.க., வெற்றி பெற்றால் இத்தொகுதியில் அடிப்படை வசதியில்லாத அனைத்து கிராமங்களிலும் 100 நாட்களில் நுாறு சதவீதம் வசதிகள் மேற்கொள்ளப்படும். சாக்கடை பிரச்னை தீர்க்கப்படும். தெரு விளக்குகள் அமைத்து, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்றார்.
ஆனையூர் பகுதி செயலாளர் முத்துப்பாண்டி, ஒத்தக்கடை ஒன்றியச் செயலாளர்கள் பிடல் காஸ்ட்ரோ, கதிர்வேல், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
