/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணிக்கவாசகர் சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது
/
மாணிக்கவாசகர் சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது
ADDED : அக் 12, 2025 11:12 PM

உசிலம்பட்டி; உசிலம்பட்டி அருகே கோவிலில் திருடிய மாணிக்கவாசகர் சிலையை விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த செல்லம்பட்டியில், சிலை கடத்தல் நடப்பதாக, திருநெல்வேலி சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதாராணிக்கு தகவல் கிடைத்தது. அவர் தலைமையில், போலீசார் இரு தினங்களுக்கு முன் அங்கு சென்று, ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த பைக்கை மறித்து சோதனை செய்ததில், ஒரு அடி உயரத்தில், 3 கிலோ எடையுள்ள மாணிக்கவாசகர் உலோக சிலை இருந்தது. பைக்கை ஓட்டி வந்த, உசிலம்பட்டி, வெள்ளிக்காரப்பட்டியை சேர்ந்த காசிமாயன், 43, என்பவரிடம் விசாரித்தனர்.
இதில், தன் கூட்டாளிகளான சோலை, வேல்முருகன், மதன் ஆகியோருடன் சேர்ந்து, உசிலம்பட்டி அடுத்த ஆனையூர், மீனாட்சி கோவிலில் இருந்து, மாணிக்கவாசகர் சிலையை திருடியுள்ளனர்.
பின், சிலையை விற்பதற்காக உசிலம்பட்டி, பாப்பாபட்டியை சேர்ந்த தவசி, 65, என்பவருடன் சேர்ந்து, சிலை கடத்தல் கும்பலிடம் காசிமாயன் விற்க முயன்றபோது சிக்கியது தெரிந்தது.
போலீசார், காசிமாயன், தவசி ஆகியோரை கைது செய்து, சிலைகளை பறிமுதல் செய்தனர். சிலையை வாங்க வந்த கும்பலை தேடுகின்றனர்.