/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
20 நாள் பாலத்தில் அதிகரிக்கும் விரிசல்
/
20 நாள் பாலத்தில் அதிகரிக்கும் விரிசல்
ADDED : மார் 03, 2026 05:48 AM

மேலுார்: மேலுாரில் 20 நாட்களுக்கு முன் கட்டப்பட்ட பாலம் மற்றும் கால்வாய் தரமற்றதாக அமைக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகத்தின் மீது புகார் எழுந்துள்ளது.
முத்தமிழ் நகரில் 5 தெருக்கள் உள்ளன. முதல் தெருவில் 20 நாட்களுக்கு முன் பாலம் மற்றும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. பாலம் தரமானதாக கட்டவில்லை.
குறுக்குத் தெருவில் உள்ள வீடுகளுக்கு கழிவு நீர் கால்வாயை கடந்து செல்ல முடியாமல் கால்வாய் திறந்த நிலையிலும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
ராஜேஷ் கூறியதாவது: பாலம் கட்டி 20 நாட்களில் மேல்பகுதி விரிசல் ஏற்பட்டு, பாலத்தின் இரு பகுதிகளிலும் உடைய ஆரம்பித்துள்ளது.
தவிர கழிவுநீர் கால்வாய் மீது கவர் சிலாப் அமைக்காததால் குறுக்கு தெருக்களில் வசிப்பவர்கள் கடந்து செல்லும்போது தவறி விழுகின்றனர்.
மேலும் வாகனங்களை கொண்டு செல்ல முடியாமல் ரோட்டில் நிறுத்துகிறார்கள். ஒப்பந்ததாரரை தொடர்பு கொண்டால் வீட்டிற்கு ரூ. 5 ஆயிரம் கேட்கிறார்.
தவிர மற்றொரு தெருவில் கால்வாயை பாதியோடு நிறுத்திவிட்டு பாலத்தையும் முழுமையாகவும் கட்டவில்லை. மாவட்ட நிர்வாகம் தரமான முறையில் பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், பணிகள் இன்னும் முடிவடையவில்லை. பாலத்தின் பழுது உடனடியாக சரி செய்யப்படும்.
கால்வாய் மீது 'கவர்சிலாப்' அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

