/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குப்பையில் வீசப்பட்ட பழைய தலையணையில் 25 சவரன் மீட்பு
/
குப்பையில் வீசப்பட்ட பழைய தலையணையில் 25 சவரன் மீட்பு
குப்பையில் வீசப்பட்ட பழைய தலையணையில் 25 சவரன் மீட்பு
குப்பையில் வீசப்பட்ட பழைய தலையணையில் 25 சவரன் மீட்பு
ADDED : டிச 03, 2025 04:53 AM

மதுரை: மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த 25 சவரன் நகைகளை, விவசாயி தன் தலையணைக்குள் வைத்து பாதுகாத்து வந்த நிலையில், அதை குடும்பத்தினர் குப்பையில் வீச, பின் துாய்மை பணியாளர்கள் உதவியுடன் நகையை மீட்டுள்ளார்.
மதுரை, சுந்தரராஜபுரம் நியூ ரைஸ்மில், 2வது தெருவை சேர்ந்தவர் தங்கம், 52; பண்ணை விவசாயம் செய்து வருகிறார். இவர் தன் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த, 25 சவரன் மதிப்புள்ள மூன்று தங்க செயின்களை பாதுகாக்க கையடக்க தலையணை செய்தார்.
அதில், நகைகளை வைத்து தினமும் பயன்படுத்தும் தலையணைக்குள் வைத்து, வெளியே தெரியாமல் இருக்க தைத்து வைத்தார். தினமும் அதை பயன்படுத்துவதால், நகை பாதுகாப்பாக இருந்தது.
இதற்கிடையே, மக ளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடப்பதால், வீட்டை சுத்தம் செய்து, பெயின்ட் அடித்தனர்.
குடும்பத்தினர் நேற்று காலை வீட்டை சுத்தம் செய்த போது, தேவையில்லாத பொருட்களை சேகரித்து அவ்வழியே வந்த மாநகராட்சி குப்பை வண்டியில் வீசினர்.
அதில், அழுக்கான 10 தலையணைகளும், தங்கம் இருந்த தலையணையும் அடங்கும். குப்பை வண்டி சென்ற நிலையில், ஒன்றரை மணி நேரம் கழித்து தங்கத்திற்கு, தலையணையில் பதுக்கிய தங்கம் குறித்த நினைவு வந்தது.
குடும்பத்தினரிடம் கேட்க, அவர்கள் அதிர்ச்சியடைந்து அந்த தலையணையை தேடினர். அப்போது தான், குப்பையில் வீசப்பட்ட தலையணைகளில் தங்கம் இருந்த தலையணையும் ஒன்று என, தெரிந்தது.
உடனடியாக குப்பை வண்டியை தெருத்தெருவாக தேடி ஒருவழியாக கண்டுபிடித்து, டிரைவரிடம், 'தலையணை ரகசியத்தை' தங்கம் கூறினார். தொடர்ந்து, கொட்டப்பட்ட குப்பையில் இருந்து, 10 தலையணைகளை தேடி பிடித்து, ஒவ்வொன்றாக கிழித்து தேடிய போது, 25 சவரன் நகைகள் அப்படியே இருந்தன.
தங்கத்தை மீட்டுத் தந்த மருதுபாண்டி உள்ளிட்ட துாய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தங்கம் நன்றி தெரிவித்தார்.

