/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வருவாய்த்துறைக்கு புதிதாக வழங்கிய ஜீப்புகள் 4; தேர்தல் நேரத்தில் பணிபுரிவது சிரமமென கவலை
/
வருவாய்த்துறைக்கு புதிதாக வழங்கிய ஜீப்புகள் 4; தேர்தல் நேரத்தில் பணிபுரிவது சிரமமென கவலை
வருவாய்த்துறைக்கு புதிதாக வழங்கிய ஜீப்புகள் 4; தேர்தல் நேரத்தில் பணிபுரிவது சிரமமென கவலை
வருவாய்த்துறைக்கு புதிதாக வழங்கிய ஜீப்புகள் 4; தேர்தல் நேரத்தில் பணிபுரிவது சிரமமென கவலை
ADDED : மார் 18, 2024 07:19 AM

மதுரை, மார்ச் 18- தமிழகத்தில் ஆர்.டி.ஓ., முதல் தாசில்தார் வரையுள்ளோரின் 250 ஜீப் கள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், புதிய வாகனங்களை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக ஆர்.டி.ஓ.,க்களுக்கு 34, தாசில்தார்களுக்கு 80 என தமிழகம் முழுவதும் 114 புதிய ஜீப்களை வாங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை 11 வாகனங்கள் கேட்டதற்கு, ஒரு ஆர்.டி.ஓ., 3 தாசில்தார்கள் என 4 ஜீப்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி ஆர்.டி.ஓ.,வுக்கு 1, திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர் தாசில்தார்களுக்கு தலா 1 என மொத்தம் 4 அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளுக்கும் தாய்த்துறையான வருவாய்த்துறைக்கு கள செயல்பாடுகள், பணிப்பளு அதிகம் உள்ளது. இத்துறையில் நிலம், சட்டம் ஒழுங்கு, பேரிடர், நிவாரணம் என பணிகள் அதிகம் உள்ளது. அதற்கேற்ப ஊழியர்கள் இல்லாத நிலையில் வாகனங்களும் போதுமானதாக இல்லையெனில் பணிப்பளு அதிகரிக்கும்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக கேட்டும், தற்போது பாதிக்கும் குறைவாக வழங்குவதால் அதிருப்தியே மிஞ்சியுள்ளது. தற்போது வாகனம் இல்லாத தாசில்தார்கள் பலரும் அவசரத்திற்கு பிற துறையினரிடம் இரவல் பெற்றுச் செல்லும் நிலை உள்ளது. தேர்தல் பணி துவங்கியுள்ள நிலையில், 24 மணி நேர கண்காணிப்புடன் செயல்பட வேண்டியுள்ளதால் குறைந்த வாகனங்களுடன் எப்படி செயலாற்றுவது என கையை பிசைகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை, தேர்தல் அதிகாரிகள் வருகை, கண்காணிப்பு என செயல்பட வேண்டியுள்ளது. புதிய வாகனங்கள் வந்தாலும் தேர்தலுக்கு வரும் உயரதிகாரிகளுக்கு பயன்படுத்தக்கூட போதுமானதாக இருக்காது.
வி.ஐ.பி.,க்களை வரவேற்க 20 கி.மீ., தொலைவில் உள்ள விமானம் நிலையம் செல்வது முதல் அவர்களை வழியனுப்புவது வரை வருவாய்த்துறையினரே செல்கின்றனர். அதற்கான குழுவுக்கு 2 ஆண்டுகளாக பழுதான வாகனமே இயங்கியது. கடந்த 6 மாதங்களுக்கு முன் அவர்களுக்கு வேறுதுறையில் இருந்து ஒரு இரவல் வாகனம் வழங்கியுள்ளனர். அதுவும் தற்போது இயங்கும் நிலையில் இல்லை. புதிய ஜீப்பும் வழங்கவில்லை. இதுபோல ரெகுலர் தாசில்தார் பலரும் பழுதான வாகனங்களிலேயே சென்று வருகின்றனர். இரண்டாம் கட்ட கொள்முதலை விரைவாக நடத்தி புதிய ஜீப்களை வழங்க வேண்டும் என வருவாய்த் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

