ADDED : மார் 14, 2024 04:25 AM
திருமங்கலம்: செக்கனுாரணி அருகே தேங்கில்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரி 55. இவரது முதல் கணவர் இறந்து விட்ட நிலையில் சிவன்காளை என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். மார்ச் 10ல் உடல்நிலை சரியில்லாததால் பரமேஸ்வரி துாக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று சிவன்காளை அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக மகள் சிவரஞ்சனி புகாரில் சந்தேகம் மரணம் என வழக்கு பதிந்து செக்கானுாரணி போலீசார் விசாரித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் பரமேஸ்வரி மூச்சு திணறலால் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி செக்கானுாரணி போலீசார் விசாரித்தனர்.
மகள் சிவரஞ்சனி 31, அவரது கணவர் ஜெயபிரகாஷ் 30, அவரது நண்பர்கள் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த மதுசூதனன் 30, மதனகோபால் 29, அழகு பாண்டி 34, ஆ.கொக்குளம் வி.ஏ.ஓ., சங்கர் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரமேஸ்வரி சிவன்காளையை திருமணம் செய்தது பிடிக்காமலும் சொத்துக்களை அவருக்கு கொடுத்துவிடுவார் என்ற எண்ணத்தில் தனக்கு சொத்தை எழுதி தருமாறு சிவரஞ்சனி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததும், பரமேஸ்வரியை கொலை செய்ய தனது கணவர் ஜெயபிரகாசுடன் திட்டமிட்டு, அவரது நண்பர்கள் மூலம் கொலை செய்ததும் தெரிய வந்தது. செக்கானுாரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
