/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொல்லியல் வரலாறுகளை விவரிக்கும் 'ஆவணம்' நுால்
/
தொல்லியல் வரலாறுகளை விவரிக்கும் 'ஆவணம்' நுால்
ADDED : ஜூலை 20, 2025 04:54 AM
மதுரை: தொல்லியல் கழகம் சார்பில் மதுரையில் தொல்லியல் துறை சார்ந்த 35 வது ஆவணம் நுால் வெளியீட்டு விழா நடந்தது. பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் ஏற்பாடுகளை செய்தது.
புதுச்சேரி ஆசியவியல் ஆய்வக ஓய்வு பேராசிரியர் விஜயவேணுகோபால் நுாலை வெளியிட, மதுரை காமராஜ் பல்கலை ஓய்வு பேராசிரியர் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். நுால் குறித்து விஜயவேணுகோபால் பேசியதாவது:
அரசன் பெயர் சொல்லி நடுகல் வைக்கப்பட்டு அந்த வீரன் எப்படி இறந்து போனார் என்கிற தகவலுடன் கல்வெட்டு கிடைத்துள்ளது. அதேநேரம் பல இடங்களில் அரசன் பெயரில்லை. உருவம் மட்டும் உள்ள கல்வெட்டும் கிடைத்துள்ளது.
அரசன் உடன்பாட்டுடன் கூடிய கல்வெட்டு, தானாக வெளியிட்டுள்ள கல்வெட்டு என இரண்டு நிலைகளில் உள்ளதை சேர, சோழ, பாண்டியர் ஆட்சி கால கல்வெட்டுகளில் காணமுடிகிறது.
நடுகற்கள் என்பது அரசு மரபுடன் கூடியதா அல்லது பொதுமக்களுடன் கூடியதா என்பதை கவனித்தால் அரசனாக உள்ளவர் மக்களின் மரபை தடுக்க முடியாது, அரசு மரபையும் தவிர்க்க முடியாது என்பதை கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. ஆய்வில் கிடைக்கும் கல்வெட்டு, ஓவியம், சிலைகள் ஆவணப்படுத்தப்படாமல் வீணாக போகிறது. அவற்றை பதிவு செய்து மேற்கொண்டு ஆய்வு செய்வதற்காக தான் ஆவணம் மூலம் புத்தகமாக வெளியிடுகிறோம் என்றார்.
தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம், நிர்வாகிகள் செல்வகுமார், சுப்புராயலு, சீனிவாசன், மங்கையர்கரசி, ராஜகோபால் கலந்து கொண்டனர். கருத்தரங்க அமர்வுகளில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் பூங்குன்றம், சுப்ரமணியன், கோவிந்தராஜ், செல்வராஜ், செல்லப்பாண்டியன் பேசினர். கல்வெட்டு, செப்பேடுகள், நாணயங்கள் குறித்த புத்தக கண்காட்சி மதுரை காமராஜர் ரோடு வி.எஸ்.செல்லம் செஞ்சுரி ஹாலில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம். இன்றுடன் நிறைவு பெறுகிறது.