ADDED : ஆக 10, 2026 12:54 AM

சோழவந்தான்: ''விக்கிரமங்கலத்தில் பாழடைந்த கட்டடத்தில் செயல்படும் போஸ்ட் ஆபீஸை மாற்றியமைக்க வேண்டும்'' என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
இங்குள்ள பஸ்ஸ்டாண்ட் எதிரே புதிய ஊராட்சி அலுவலகம் உள்ளது. இதனருகே சமுதாய கூடத்தின் சமையலறையாக செயல்பட்ட கட்டடத்தில் போஸ்ட் ஆபீஸ் இயங்குகிறது. ஏற்கனவே சமுதாயக்கூடம் காலாவதியானதால் இடிக்கப்பட்டு தற்போது புதிய ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டது.
சமையலறை கட்டடமும் பல இடங்களில் விரிசல் விழுந்து செடி, கொடிகள் முளைத்து பாழடைந்து வருகிறது. கட்டடத்தின் கூரை, சுவர்களில் மழை நீர் இறங்கி வலுவிழந்து வருகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போஸ்ட் ஆபீசை மாற்ற வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
