ADDED : செப் 15, 2026 07:44 PM

மதுரை: மதுரை அரசரடி – பெரியார் பஸ்ஸ்டாண்ட் செல்லும் ரோட்டில் உள்ள பள்ளங்களால் விபத்து அபாயம் அதிகம் உள்ளது.
இந்த ரோட்டில் அரசரடியை அடுத்துள்ள ரயில்வே கிரவுண்ட் நேர் எதிரேயும், அதில் இருந்து பெரியார் பஸ்ஸ்டாண்ட் செல்லும் வழியிலும் இரு பள்ளங்கள் உள்ளன. ரோட்டில் சிறிய பள்ளமாக தோன்றி, விரிவடைந்து பெரும் பள்ளமாக உள்ளது. போக்குவரத்து நிறைந்த, தரமான ரோடாக உள்ளதால் வாகனங்கள் விரைவாக செல்கின்றன. பள்ளத்தில் விழுந்து எழும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். சமீபத்தில் இருவர் இவ்வாறு பாதித்துள்ளனர்.
மழை நேரத்தில் தண்ணீர் தேங்கினால் பள்ளம் தெரிவதில்லை. அதுபோன்ற நேரத்தில் அதிக விபத்துகள் நடக்கின்றன. இந்த ரோட்டில் கடைகளுக்கு வரும் வாகனங்கள் பள்ளத்தின் அருகே நிறுத்தப்படுவதால் நெரிசலும் அதிகமாகிறது. அப்பகுதியினர் தற்காலிக ஏற்பாடு செய்தாலும் விரைவில் மீண்டும் பள்ளம் உருவாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெடுஞ்சாலை கொடுஞ்சாலை ஆகுமுன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
