'போதைப்பொருள் வழக்கில் மாஜிஸ்திரேட் விளக்கம் தேவை'
'போதைப்பொருள் வழக்கில் மாஜிஸ்திரேட் விளக்கம் தேவை'
ADDED : செப் 26, 2026 03:53 AM
மதுரை: மதுரையைச் சேர்ந்தவர் சிவகணேஷ். இவர் மீது, போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார், 2020ல் வழக்கு பதிந்தனர். அதை ரத்து செய்யக்கோரி, சிவகணேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி.முருகன் பிறப்பித்த உத்தரவு:
விசாரணை அதிகாரியான எஸ்.ஐ., பேரரசி செப்., 29ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
குற்றப்பத்திரிகை மற்றும் எப்.ஐ.ஆர்., நகலை குறிப்பிட்ட காலத்திற்குள், மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பாதது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும். இவ்வழக்கில், காவல்துறைக்குரிய அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு நடுவரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.
நடுவர், 2026ல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். நடுவர் மற்றும் விசாரணை அதிகாரி, உரிய கவனம் செலுத்தவில்லை. ஒரு வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு முன், அது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட கால வரம்பிற்குள் உள்ளதா என நடுவர் பரிசீலிக்க வேண்டியது அவசியம். கால வரம்பிற்கு பின், சில சிறு குற்றங்கள் தொடர்பான வழக்கை, நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுக்க இயலாது.
எதனடிப்படையில், இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து, நடுவர் விளக்க அறிக்கையை இந்நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். கீழமை நீதிமன்ற விசாரணைக்கு, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.
