/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்கள் நலனுக்கேற்ப ஆட்சி நடத்துவதே குடியரசு: சிதம்பரம் விளக்கம்
/
மக்கள் நலனுக்கேற்ப ஆட்சி நடத்துவதே குடியரசு: சிதம்பரம் விளக்கம்
மக்கள் நலனுக்கேற்ப ஆட்சி நடத்துவதே குடியரசு: சிதம்பரம் விளக்கம்
மக்கள் நலனுக்கேற்ப ஆட்சி நடத்துவதே குடியரசு: சிதம்பரம் விளக்கம்
ADDED : ஜன 27, 2025 04:34 AM
மதுரை: ''நாட்டு மக்கள் நலனுக்கேற்ப ஆட்சி நடத்துவதே குடியரசு,'' என, மதுரையில் காங்., சார்பில் நடந்த குடியரசு தின விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் விளக்கினார்.
மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:
சுதந்திரம், குடியரசு இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. சுதந்திரம் அடைந்த நாடுகள் எல்லாம் குடியரசுகள் அல்ல. சுதந்திரம் அடைந்தும் சர்வாதிகார ஆட்சி நடந்த நாடு பாகிஸ்தான். ஓட்டுப்போடுவதற்கு முன் குடியரசு குறித்து மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
நாட்டு மக்கள் சொல்வதற்கேற்ப ஆட்சி நடத்துவதே குடியரசு. இன்று அதற்கும் ஆபத்து வந்துள்ளது. காலப்போக்கில் சுதந்திரத்திற்கும் ஆபத்து வரும்.
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ., கூட்டணி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே தவிர, குடியரசு அல்ல. மக்கள் விரோத ஆட்சியாக பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது.
நாட்டை கட்டமைக்க நேரு, இந்திரா, ராஜிவ், மன்மோகன் சிங் ஆற்றிய பங்களிப்பு அதிகம். உணவு, கல்வி, வேலை, தகவல் பெறுதல், அடையாளம் ஆகியவற்றுக்கான உரிமைகளை வழங்கியது காங்கிரஸ். முந்தைய அரசின் தோள்களின் மேல் தற்போதுள்ள அரசு சவாரி செய்கிறது.
144 கோடி மக்கள் தொகையில் 20 கோடி பேர் ஏழைகள். பணக்காரர்களுக்கான வங்கிக் கடனை தள்ளுபடி செய்யும் பிரதமர் மோடி அரசு, ஏழைகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. கவர்னருக்கும், அரசுக்கும் உள்ள மோதலால் தமிழகத்தின் 6 பல்கலைகளுக்கு துணைவேந்தர் இல்லை. துணைவேந்தரை நியமிப்பதில் மாநில அரசின் பங்களிப்பு இல்லாத வகையில் விதிகளில் திருத்தம் செய்துள்ளனர்.
இத்தகைய மக்கள் விரோத அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.
செல்வப்பெருந்தகை பேசுகையில், ''டங்ஸ்டன் விவகாரத்தில் பா.ஜ., இரட்டை வேடம் போடுகிறது. நாட்டின் அரசியலமைப்பை சிதைக்கும் முயற்சியில் பா.ஜ., செயல்படுகிறது. அதானி உள்ளிட்ட சிலருக்காக மட்டும் ஆட்சி செய்கிறது,'' என்றார்.

