/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் வெள்ளநீர் வடிய போர்க்கால நடவடிக்கை
/
மதுரையில் வெள்ளநீர் வடிய போர்க்கால நடவடிக்கை
ADDED : அக் 27, 2024 04:26 AM
மதுரை : மதுரையில் நேற்று முன்தினம் திடீரென கொட்டிய கனமழையால் மதுரை வைகையாற்றின் வடகரை பகுதிகள் மற்றும்செல்லுார் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் தெரிவித்தனர்.
மதுரை மாநகராட்சிக்குஉட்பட்ட சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்தது. ஒரு சில பகுதிகளில் இரண்டடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியதால் வீடுகளுக்குள்ளும்தண்ணீர் தேங்கியது.
வருவாய்த்துறை, நீர்வளதுறை, மின்சாரத்துறை, மாநகராட்சி அலுவலர்கள் மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்று களஆய்வு செய்தனர்.
சில பகுதிகளில் மழைநீர் வடிந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:
மழைநீர் சூழ்ந்த தாழ்வான பகுதிகளில் குடியிருந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். ஆயிரம் பேருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. மழைநீர் வடிந்த பகுதியில் உள்ள மக்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.
இரண்டு இடங்களில் மட்டும் 70 பேர் முகாமில்தங்க வைக்கப்பட்டு பால், உணவு, குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக தற்காலிக கால்வாய் அமைக்கப்பட்டு மழைநீர் வெளியேற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது:
அக்டோபர், நவம்பரில் பொழிய வேண்டிய வடகிழக்கு பருவமழை மிக முன்னதாக ஆகஸ்ட், செப்டம்பரிலேயே மதுரையில் தொடங்கி விட்டது.பருவமழைக்கு முன்பாகவே மதுரையில் மழை தொடர்ந்ததால் மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்மாய்கள் பரவலாக நிரம்பியுள்ளன.
கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர்இறுதியாக பந்தல்குடி கால்வாய் வழியாக செல்லுார் கண்மாயில் இருந்து வைகையாற்றுக்கு செல்கிறது. கால்வாய் செல்லும் சில இடங்களில் அதன் கொள்ளளவை விட அதிகமாக மழைநீர் செல்வதால் கால்வாயைத் தாண்டி குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.
மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறை பணியாளர்களும் களத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.