/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறுநீரக மாற்று அறுவை செய்த பின் குழந்தை பெற்ற பெண்
/
சிறுநீரக மாற்று அறுவை செய்த பின் குழந்தை பெற்ற பெண்
சிறுநீரக மாற்று அறுவை செய்த பின் குழந்தை பெற்ற பெண்
சிறுநீரக மாற்று அறுவை செய்த பின் குழந்தை பெற்ற பெண்
ADDED : அக் 16, 2024 06:48 AM

மதுரை : சென்னை அரசு மருத்துவக்கல்லுாரியின் 20 ஆண்டு ஆய்வின்படி, 1,091 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில், 201 பெண்கள் குழந்தைப்பேறு வயதுக்கு உட்பட்டவர்கள்.
அவர்களில், 14 பேர் கர்ப்பம் தரித்து ஒன்பது பேர் குழந்தை பெற்றுள்ளனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் குழந்தை பெறுவது சவாலான விஷயம்.
மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு டாக்டர்கள், பிற துறை டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் மதுரையைச் சேர்ந்த 32 வயது பெண், அறுவை சிகிச்சையின் மூலம் ஆண் குழந்தை பெற்றது சாதனையான விஷயம் என்கின்றனர் டீன் அருள் சுந்தரேஷ்குமார், மகப்பேறு துறைத்தலைவி மகாலட்சுமி, சிறுநீரக அறுவை சிகிச்சை துறைத்தலைவர் ஞானசேகரன், சிறுநீரகவியல் பேராசிரியர் பாலமுருகன்.
அவர்கள் கூறியதாவது: இந்த பெண்ணுக்கு, 23 வயதில் திருமணம் நடந்தது. அதன் பிறகே நாள்பட்ட சிறுநீரக கோளாறு இருப்பது மதுரை அரசு மருத்துவமனையில் கண்டறியப்பட்டு, மூன்றாண்டுகள் சிறுநீரகவியல் துறையில் டயாசிலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது தாயிடம் இருந்து, 2018ல் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் மாதந்தோறும், 20,000 ரூபாய் மதிப்புள்ள, 'இம்யூனோ சப்ரஷன்' மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மகப்பேறின் போது, குழந்தைக்கு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக மாற்று மருந்து இலவசமாக வழங்கப்பட்டு மகப்பேறு, சிறுநீரகவியல் நிபுணர்கள் கண்காணிப்பில் கர்ப்ப காலம் கண்காணிக்கப்பட்டது.
அக்., 2ல் அறுவை சிகிச்சை வாயிலாக ஆண் குழந்தை பெற்ற நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.