/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலெக்டரிடம் ஆவின் பால் முகவர்கள் வலியுறுத்தல்
/
கலெக்டரிடம் ஆவின் பால் முகவர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 22, 2025 03:56 AM
மதுரை: மதுரையில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சமூகநல திட்ட துணை கலெக்டர் கார்த்திகேயினி பங்கேற்றனர்.
மதுரை மத்திய மண்டலம், ஆரப்பாளையம் பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள் கே.ஆர்.சாமி, பிரபாகர், ராஜ்குமார், சங்குராஜா உள்பட பலர் அளித்த மனு:
மத்திய மண்டலம், ஆரப்பாளையம் மண்டல அலுவலகங்களில் பணம் செலுத்துவதற்கு பதில் வேறு மண்டலங்களில் செலுத்த பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களும், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வழக்கம்போல பணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச் செயலாளர் சிவபாண்டியன் அளித்த மனுவில், 'மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகள் அனைத்தையும் சமூகநீதி விடுதி என பெயர் மாற்றம் செய்யக் கூடாது. கள்ளர் விடுதி என்றே இயங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர் சங்கத்தின், மதுரை காமராஜ் பல்கலை உறுப்பு கல்லுாரி கிளை உறுப்பினர்கள் அளித்த மனுவில், ''எங்கள் கல்லுாரியில் சமூகவியல் துறைக்கு இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை நடக்கவில்லை. போதிய ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளபோதிலும் கல்லுாரி நிர்வாகம் அத்துறையை செயல்படுத்த முயற்சிக்கவில்லை.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
மேலுார் எட்டிமங்கலம் வழக்கறிஞர் ஸ்டாலின் அளித்த மனுவில், 'மதுரை மாவட்ட பாசனத்திற்காக பல்வேறு இடையூறுகளுக்கு இடையே முல்லைப் பெரியாற்றில் அணை கட்டப்பட்டது. இதனை கட்டுவதற்கு காரணமான பென்னிகுவிக் சிலையை மேலுார் பஸ்ஸ்டாண்ட் முன்பு அமைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.