ADDED : ஏப் 19, 2026 10:19 PM
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் வறட்சியால் விவசாய தொழிலாளர்கள் வருவாய்க்கு வழியின்றி வேலைதேடி வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு பருவமழை பொய்த்துப் போனதால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பேரையூர் தாலுகாவில் கண்மாய், குளங்கள் நிரம்பாமல் கோடை காலத்திற்கு முன்பே வறண்டன. விவசாயம் முற்றிலும் முடங்கியுள்ளது.
பருவத்தில் சாகுபடி செய்ய வேண்டிய பயிர்களை நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இரு மாதங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது. இந்தாண்டு பருவமழை வெறும் துாரலோடு முடிவுக்கு வந்ததால் நிலைமை மோசமாக உள்ளது. மானாவாரி பயிர்களான கம்பு, உளுந்து ஆகியவை மழையின்றி கருகி நஷ்டத்தை கொடுத்தது.
இப்பகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளதால் பெரும்பாலானோருக்கு இப்பணிகள் மூலமே வருவாய் கிடைத்தது. நடவு பணியில் துவங்கி பராமரித்தல், அறுவடை வரை கூலி ஆட்களை கொண்டு பணிகள் நடப்பதால் பலர் வேலை வாய்ப்பு பெற்றனர்.
இந்நிலையில் கடும் வறட்சியால் விவசாயம் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விவசாய தொழிலாளர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். விவசாயத்தை நம்பியுள்ள 80 சதவீதம் பேர் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். அவர்களின் ஜீவாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வேறு வேலைகளை தேடும் நிலையில் உள்ளனர்.
பலர் வேறு வழியின்றி ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இப்பணிகளும் மாதம் முழுவதும் கிடைக்காமல் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே கிடைப்படுவதால் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளோர் நிலை பரிதாபமாக உள்ளது. இதனால் வேறு வழியின்றி வேலை தேடி திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் செல்கின்றனர். இதனால் இவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இடம்பெயரும் கூலித் தொழிலாளர் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
