ADDED : மார் 13, 2026 05:55 AM
மதுரை: மதுரை விமான நிலையத்தில் 'அண்டர்பாஸ்' மூலம் ரன்வே பாதையை நீட்டித்தால், அந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் 7 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தற்போதுள்ள ரன்வே 7500 அடியிலிருந்து 12 ஆயிரம் அடியாக நீட்டிப்பதற்கு விமானப் போக்குவரத்து ஆணையம் (ஏ.ஏ.ஐ.,) அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆட்சியில் மாநில அரசு அனுப்பிய இத்திட்டத்திற்கு அனுமதியளித்த முதல்வர் ஸ்டாலின், 'அண்டர்பாஸ்' மூலம் ரன்வே தளம் நீட்டிக்கப்படும் என சட்டசபையில் 2021 ஆகஸ்டில் அறிவித்தார். நீட்டிப்புக்கு தேவையான 653.35 ஏக்கர் இடத்தில் 543.41 ஏக்கர் நிலம் தமிழக அரசால் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்னும் 110 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டிய நிலையில் தமிழக அரசு விரைந்து அந்த இடத்தை கையகப்படுத்த வேண்டும் என தென்தமிழக தொழில் வணிகர்கள் சார்பில் தெரிவிக்கிறோம்.
மேலும் 'அண்டர்பாஸ் பாலம் வேலைக்கு ரூ.230 கோடி செலவாகும் என 2022ல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அத்திட்டத்தையே செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் விமானநிலையத்தின் கிழக்குப் பகுதியில் 7 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
