ADDED : ஜன 29, 2025 06:18 AM
மதுரை :  அழகர்கோவில் ரோடு நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளின் இறுதிகட்டப் பணிகள் துவங்கின.
மதுரை - அழகர்கோயில் இடையே 20 கி.மீ., தொலைவு ரோட்டை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டது. கடந்த ஓராண்டுக்கு முன் துவங்கிய பணிகள் கள்ளந்திரி வரை 17 கி.மீ.,க்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. மீதியுள்ள பணிகள் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது.
இப்பணிகளை மீண்டும் துவக்கியுள்ளனர். கள்ளந்திரியில் இருந்து அழகர்கோவில் கோட்டைவாசல் வரையான பகுதி ரோடு தற்போது 7 மீ., அகலத்தில் உள்ளது. இதனை இருபுறமும் தலா 7.5 மீ., அகலம், நடுவில் மீடியன் 1.20 மீ., அகலம் என மொத்தம் 16.20 மீ., அகலத்திற்கு ரூ.22 கோடி மதிப்பில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்கான பூமிபூஜை, சுத்தம் செய்யும் பணிகள் துவங்கின. ஏற்பாடுகளை கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த் செய்திருந்தனர்.

