/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆயிரம் தீர்த்தங்கள் கொண்ட அழகர்கோயில் மலை
/
ஆயிரம் தீர்த்தங்கள் கொண்ட அழகர்கோயில் மலை
ADDED : ஜன 15, 2024 04:20 AM

அழகர்கோவில், : ''அழகர்கோவில் கள்ளழகர்கோயில் மலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளன'' என, பெரியாழ்வார் பாசுரத்தில் குறிப்பிட்டுஉள்ளதாக கோயில் தலைமை பட்டாச்சாரியர் அம்பி கூறுகிறார்.
அவர் கூறியதாவது: ஒவ்வொரு பழமையான கோயிலும் அதற்கான தீர்த்த சிறப்பை பெற்றுள்ளது. அதில் பக்தர்கள் குளித்து நீராடி வழிபடுகின்றனர். தீர்த்தக்குளங்கள் பக்தர்களின் பிணி, பாவங்களை போக்கும் தன்மை கொண்டவை. பல கோயில்களில் ஒரே ஒரு தீர்த்தம் மட்டுமே இருக்கும்.
சில கோயில்களில் கூடுதலாக 2 அல்லது 3 தீர்த்தங்கள் இருக்கும். மிகவும் அரிதாக ராமேஸ்வரத்தில் 20க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளன. ஆனால் அழகர்கோயிலில் மட்டும் எண்ணிலடங்கா தீர்த்தங்கள் உள்ளன. இதை பெரியாழ்வார் திருமொழி பாசுரத்தில், ''ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும், ஆயிரம் பூஞ்சோலைகள் உடைய திருமால் இருஞ்சோலை'' என பாடுகிறார்.
இவற்றில் முக்கியமானது புண்ணிய சரவணன், பவகாரணி, இஷ்ட சித்தி ஆகிய தீர்த்தங்கள். ஆனால் அவை தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை. தீர்த்தங்களுக்கெல்லாம் தாயாக உள்ளது நுாபுர கங்கை.
இது தவிர பண்டாரி வாபி, ஆறாமத்து குளம், அக்னி புஷ்கரணி, கிருஷ்ண வாபி, தட்சிண நாராயண புஷ்கரணி, உத்தர நாராயண புஷ்கரணி, மங்கல தீர்த்தம் (மஞ்சள் கிணறு அல்லது அழகிய மணாளன் கிணறு) அனுமார் தீர்த்தம், கருட தீர்த்தம், பாண்டவர் தீர்த்தம், பெரிய அருவி, வேணு தீர்த்தம் அல்லது மூங்கில் கவி, கதலி வாவி, மாட்டுப் பண்ணை அருவிகளும் முக்கியமானதாக உள்ளன.
மிகப்பழமையான அனுமார் தீர்த்தம் கடல் மட்டத்தில் இருந்து 168 அடி உயரத்திலும், கருட தீர்த்தம் ஆயிரத்து 108 அடி உயரத்திலும் உள்ளன. பிருந்தாவனம் எனப்படும் மாட்டுப் பண்ணை தீர்த்தம் மலை மீதுள்ள வனப்பகுதியில் வாழும் புனித பசுக்கள் நீர் அருந்தவும் குளிக்கவும் பயன்படுகிறது, என்றார்.