மதுபோதைக்கு அடிமையாவது சமூகப்பிரச்னை: டாக்டர் சி.ராமசுப்பிரமணியம் பேச்சு
மதுபோதைக்கு அடிமையாவது சமூகப்பிரச்னை: டாக்டர் சி.ராமசுப்பிரமணியம் பேச்சு
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 05:34 PM
மதுரை: ‘மது போதைக்கு அடிமையாதல் தனிநபர் பிரச்னை அல்ல. சமூகப் பிரச்னை’ என மதுரை தானம் அறக்கட்டளையின் 30 வது ஆண்டு விழாவில் எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சி. ராமசுப்பிரமணியன் பேசினார்.
நிர்வாக இயக்குநர் வாசிமலை தலைமை வகித்தார். மதுபோதை மீட்பு குறித்த புத்தகத்தை வெளியிட்டு டாக்டர் ராமசுப்பிரமணியன் பேசியதாவது: இன்றைக்கு குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறவர்களின் வயது குறைந்துவிட்டது. பள்ளி மாணவர்கள் போதைக்கு ஆளாகின்றனர். மகளிரிடமும் குடிப்பழக்கம் தொற்றியுள்ளது. குடிப்பழக்கமும், மனநோயும் தீர்க்கக் கூடியது. ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முழுமையாக வெளியே வரலாம். போதைப்பழக்கம் என்பது தனிநபர், அவரது குடும்பப் பிரச்னை அல்ல, சமூகப் பிரச்னை என்பதை உணர்ந்து போராடினால் தான் விடிவு கிட்டும் என்றார்.
மகாராஷ்டிராவின் ஷிங்கோலி சரத் அறக்கட்டளைக்கு சமூக விருதுடன் ரூ. 50ஆயிரம், மேலக்கொடுமலுார் பெரியகண்மாய் நீர்ப்பாசனக் குழுவுக்கு ரூ. ஒருலட்சம் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சக்திவேல், கனரா வங்கி உதவிப் பொது மேலாளர் சீனிவாஸ் கலந்து கொண்டனர். திட்டத் தலைவர் சிவானந்தன் நன்றி கூறினார்.
