/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கால் இழந்தாலும் கை கொடுத்தது எலக்ட்ரிக் வாகனம்
/
கால் இழந்தாலும் கை கொடுத்தது எலக்ட்ரிக் வாகனம்
ADDED : ஏப் 15, 2025 07:36 AM

மதுரை : சர்க்கரை நோய் பாதித்த நிலையில் துாய்மை பணியின் போது உடைந்த மதுபாட்டில் காலில் குத்தியதால் இரு கால்களையும் இழந்த மதுரை மாவட்டம் மேலுாரைச் சேர்ந்த காளிமகாதேவி 41, தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்து உணவு டெலிவரி தொழில் செய்து 4 பிள்ளைகளையும் காப்பாற்றி வருகிறார்.
முழங்காலுக்கு மேலே இரு கால்களிலும் ரத்தஓட்டமின்றி மதுரை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டது குறித்து டீன் அருள் சுந்தரேஷ்குமார், இயல்பியல் மற்றும் புனர்வாழ்வு துறைத் தலைவர் ராமநாதன், டாக்டர்கள் வரதராஜன், சிந்தியா கூறியதாவது:
இரு கால்களையும் இழந்தபின் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார் காளி மகாதேவி. காயங்கள் ஆறிய 3 மாதம் கழித்து அவருக்கு எங்கள் துறை சார்பில் அளவெடுத்து செயற்கைகால் தயாரித்து வழங்கினோம். ஆனால் வெளியிடங்களில் 'வாக்கர்' பிடித்து தான் நடக்க முடியும் என்பதால் மதுரை வில்லாபுரம் அரசு மைய அலுவலரிடம் பேசி மூன்று சக்கர எலக்ட்ரிக் வாகனம் வாங்கி கொடுத்தோம்.
மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து அரசு சலுகைகளுக்கு உதவினோம். நோயை சரிசெய்வதோடு எங்கள் வேலை முடிந்து விடாது. அவர்கள் மீண்டும் சுதந்திரமாக வேலைக்குச் சென்று பொருளீட்டுவது தான் எங்கள் பணியின் நிறைவாக நினைக்கிறோம் என்றனர்.
காளிமகாதேவி கூறியதாவது: மேலுாரில் குடியிருந்த போது துாய்மை பணியாளராக இருந்தேன். ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. வேலையில் இருந்தபோது ஒருநாள் உடைந்த மதுபாட்டிலின் சிறு துண்டு இடதுகாலில் குத்தியது. கவனிக்காமல் விட்டதால் கண்ணாடி சில்லு விரலுக்குள் பதிந்து காலின் நிறம் மாறியதால் தனியார் மருத்துவமனை சென்ற போது கட்டை விரலையும் 3வது விரலையும் எடுக்க வேண்டும் என்றனர். அதன் பின்னும் பிரச்னை தொடர்ந்தது. இரு கால்களிலும் கிருமித்தொற்று பாதித்தது, சர்க்கரை நோயும் சேர்ந்து முழங்காலுக்கு மேல் பகுதி வரை ரத்தஓட்டம் இன்றி கால் கருப்படைந்தது. அவசரமாக மதுரை அரசு மருத்துவமனை சென்ற போது உயிரை காப்பாற்றுவதற்காக இரு கால்களையும் அகற்றினர்.
கணவர் வருமானத்தோடு சேர்ந்து வேலை செய்து நான்கு பிள்ளைகளையும் (மூன்று பெண், ஒரு ஆண்) காப்பாற்றி வந்தேன். என் வருமானம் நின்றதோடு எனக்கான செலவும் அதிகரித்ததால் இரு பிள்ளைகளின் படிப்பு நின்று போனது. வீட்டில் வறுமை ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் உதவி செய்து அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்க செய்தனர். இரு செயற்கை கால்கள் பொருத்த உதவினர்.
கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வேலைக்கு எழுதி வைக்க சென்ற போது 'சொமட்டோ' உணவு டெலிவரிக்கு 'என்னைப் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்' என்று கேள்விப்பட்டேன். இப்போது அங்கே வேலை பார்க்கிறேன். வேலைக்காக மதுரை ஒத்தகடைக்கு குடிபெயர்ந்தேன். எலக்ட்ரிக் வாகனத்திற்கு இரவு முழுவதும் சார்ஜ் செய்தால் ஒருநாளைக்கு 50 கி.மீ., துாரம் செல்ல முடியும்.
குறைந்தது 8 முதல் 10 உணவு டெலிவரி கொடுப்பதன் மூலம் ரூ.500 முதல் ரூ.600 தினமும் கிடைக்கிறது. மீண்டும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பியதும் என்னாலும் சுயமாக சம்பாதிக்க முடிவது பெருமையாக உள்ளது. எலக்ட்ரிக் வாகனத்திற்கு இன்னொரு பேட்டரி கிடைத்தால் இன்னும் கூடுதலாக உழைத்து பொருளீட்டுவேன் என்றார்.
இவருக்கு உதவ 89409 55156