ADDED : டிச 26, 2024 05:10 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி ஒட்டுப்பட்டியில் நாடக மேடையில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
இங்கிருந்த மையக் கட்டடம் பழுதானதால் ஓராண்டுக்குமுன் வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. கட்டடம் சாலையோரத்தில் பாதுகாப்பின்றி இருந்ததால் 2 மாதங்களாக கிராம மந்தையில் உள்ள நாடக மேடையில் மையம் செயல்படுகிறது.
மேடையின் பெரும்பகுதியை கம்பி வேலி, கட்டுமான பணிகளை மறைக்கும் பச்சை துணியால் 5 அடி உயரத்திற்கு மூடியுள்ளனர்.
இந்த இடைவெளியில் வெயில் உள்ளே விழுகிறது. கர்ப்பிணிகள் தாய்மார்களுக்கு இங்கு தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் இன்றி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஹேமலதா கூறுகையில், ''பழுதடைந்த மைய கட்டடத்தை இடித்து, புதிதாக கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. இரு வாரங்களில் பணிகள் துவங்கும்'' என்றார்.

