ADDED : ஆக 25, 2026 03:24 AM

கொட்டாம்பட்டி: வீரசூடாமணிபட்டியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணிகள் துவங்கி ஓராண்டைக் கடந்தும் முடியவில்லை என்பது பெற்றோர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
வீரசூடாமணி பட்டியில் செயல்படும் மையத்தில் சுந்தரராஜபுரம், அம்பலக்காரன்பட்டி, கண்டு மூக்கன்பட்டி உள்ளிட்ட ஐந்து கிராம குழந்தைகள் படிக்கின்றனர்.
ஏற்கனவே துவக்கப்பள்ளி பின்புறம் செயல்பட்ட மையம் சிதிலமடையவே 3 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. இதற்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கி ஓராண்டுக்கு முன்புதான் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டது. இதுவரை பணிகள் முடியவில்லை.
பெற்றோர் கூறியதாவது: ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை மின் சப்ளை, தண்ணீர் தொட்டி, கழிப்பறை கட்டவில்லை. வகுப்பறைக்குள் பெயின்ட் அடித்து சுவரில் குழந்தைகளுக்கான சித்திரம் வரையாமல் பூட்டிக் கிடப்பதால் மக்களின் வரிப்பணம், வாடகை கட்டடத்தில் செயல்படுவதால் அரசு வருவாய் வீணாகிறது. மையம் வாடகை கட்டடத்தில் செயல்படுவதால் குழந்தைகள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர்.
சாப்பிட்ட பின் கை கழுவ போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் மாவட்ட நிர்வாகம் அங்கன்வாடி மையத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.
