ADDED : ஜூலை 26, 2025 04:41 AM

சோழவந்தான்: சோழவந்தானில் பராமரிப்பின்றி பாழடைந்து வரும் அங்கன்வாடி மையம் கரிமூடை கோடவுனாக மாறி வருகிறது.
இங்கு சனீஸ்வரன் கோயில் எதிரே அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கட்டடத்தில் செயல்படுகிறது. தற்போது இது பாழடைந்து வருகிறது. இடிபாடுகள், அகற்றப்படாத குப்பையுடன் பார்ப்பதற்கு அச்சமூட்டும் வகையில் உள்ளது. இவ்வளாகம் முழுவதும் தனியார் நிர்வாகம் கரிமூடைகளை அடுக்கி வைத்து வியாபாரம் செய்கிறது.
இம்மையத்தில் ஏராளமான குழந்தைகள் படித்து வரும் நிலையில் கரித்துகள்களால் சுவாசக் கோளாறு ஏற்படும் நிலை உள்ளது. உயரமாக அடுக்கிய மூடைகள் குழந்தைகள் மீது சரிந்து விபரீதம் நடக்கவும் வாய்ப்புள்ளது. வளாகம் முழுவதும் குப்பையால் நிறைந்துள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருப்பதால் சிலர் ஏறிக்குதித்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். பேரூராட்சி அதிகாரிகள் அங்கன்வாடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.