ADDED : செப் 15, 2026 05:52 PM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியில் சில்லாம்பட்டி, புதுப்பட்டி மற்றும் உசிலம்பட்டி நகராட்சிப் பகுதியை ஒட்டியுள்ள அரசு போக்குவரத்து பணிமனை பகுதி தெருக்கள் உள்ளன. இங்கு சேரும் குப்பையை புதுப்பட்டியில் மயான பகுதிகளில் கொட்டிச் செல்கின்றனர்.
கொட்டும் குப்பையை முறையாக கையாளாமல் விட்டுவிடுவதால் நிலத்தடி நீர் பாதிப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும், எரியூட்டும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் பொது மக்கள் ஊராட்சி ஒன்றியத்தில் புகார் செய்தனர். நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று குப்பையை லாரியில் ஏற்றி அங்கு கொட்ட வந்தனர். இதைப் பார்த்த கிராமத்தினர் அங்கு திரண்டு சென்று லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி ஒன்றிய அதிகாரிகள், கொட்டிய குப்பையை 2 நாட்களில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் லாரியை விடுவித்தனர்.
