மதுரை 'மாஸ்டர் பிளான்'வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்
மதுரை 'மாஸ்டர் பிளான்'வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்
ADDED : பிப் 19, 2024 05:04 AM
மதுரை : மதுரையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட நகர் விரிவாக்கம் தொடர்பான 'மாஸ்டர் பிளான்' வரைவு திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 3 நகராட்சிகள், 4 டவுன் பஞ்சாயத்துகள், 316 ஊராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 147.97 சதுர கிலோ மீட்டராக நகர் எல்லை விரிவடையும் சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1971ல் ஏற்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் உருவாக்கம் திட்டம் கொடைக்கானல், ஊட்டி தவிர பிற நகரங்களில் செயல்படுத்தப்படவில்லை. மதுரை மாநகராட்சியில் 1994ல் பழைய 72 வார்டுகளுக்கான மாஸ்டர்பிளான் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாததால் நகரில் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. குடியிருப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்களாக பெருகிவிட்டன. இதனால் குடியிருப்புகள் நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி போன்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய தொழில் வளர்ச்சிக்கான நகர்ப்புற இடவசதி குறுகிவிட்டன.
இதற்கு தீர்வாகத்தான் தற்போது 'மாஸ்டர் பிளான்' உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உசிலம்பட்டி, மேலுார், திருமங்கலம் நகராட்சிகள் உட்பட 4 டவுன் பஞ்சாயத்துகள், 316 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து 147.97 சதுர கிலோ மீட்டருக்கான 'மாஸ்டர் பிளான்' திட்டம் நிறைவேற்றுவதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
இந்த வரைவு திட்டம் தற்போதுள்ள 100 வார்டுகளையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, ஊராட்சிகளில் உள்ள வீட்டு மனைகள், வணிக நிறுவனங்கள், நீர்நிலைகள், தியேட்டர்கள், மால்கள் என அனைத்துவகை நிலப் பிரிவுகளின் சர்வே எண்கள், அரசு நிலம் என்றால் அதன் வகைப்பாடு, தனியார் நிலமாக இருந்தால் அதன் உரிமையாளர் விவரம் போன்றவை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் சென்னையைப் போல் மதுரையை சுற்றிலும் தொழில்கள் துவங்குவதற்கான நில வசதிகள் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். நகர் வளர்ச்சியடையும். தற்போது ஒப்புதல் பெற்றுள்ள வரைவு திட்டம் குறித்து மக்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக் கேட்டு இறுதி திட்டம் அறிக்கை முடிவு செய்யப்படும் என்றார்.
