தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களை அரிட்டாபட்டி மலை காப்பாற்றப்படுமா

பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களை அரிட்டாபட்டி மலை காப்பாற்றப்படுமா

பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களை அரிட்டாபட்டி மலை காப்பாற்றப்படுமா


ADDED : ஜூன் 01, 2011 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2011 02:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலூர்: காலத்தால் முற்பட்ட அரிய பொக்கிஷங்களான பிராமி கல்வெட்டுக்கள், சமண படுகைகள், புத்தர் சிலைகள், குடைவரை கோயில்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய அரசு, கிரானைட் கிடைப்பதால் அம் மலைகளை அழிக்க முன் வந்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ளது அரிட்டாபட்டி கிராமம். இக்கிராமத்ததை சுற்றி ஆட்டாமலை, ராமாயி மலை, கழுகு மலை, களிஞ்ச மலை, வயித்து பிள்ளான் மலை, தேங்கூர் மலை, பெருமாள் மலை என ஏழு மலை குன்றுகள் உள்ளது.

இதில் கழுகுமலை எனப்படும் ஓவாமலையின் மேற் பரப்பில் பெரிய குகை உள்ளது. அங்கு 60 பேர் அமர்ந்து பாடம் கேட்கும் சமணப் பள்ளி செயல்பட்டுள்ளது. அத்துடன் அக் குகைகளில் ஐந்து இடங்களில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் காணப்படுகிறது.தமிழகத்தில் கிடைத்த பிராமி கல்வெட்டுகளில் காலத்தால் முந்திய கல்வெட்டுக்கள் இவை என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. சங்க கால பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், வெள்ளறை நிகமம் எனும் வணிக குழு பற்றி இங்கு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. வெள்ளறை என்பது தற்போது அருகில் உள்ள வெள்ளரிபட்டி என்னும் ஊரின் பழம் பெயராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதே போல் ராமாயி மலையை ஒட்டி உள்ள இடத்தில் குடைவரை சிவன் கோயில் ஒன்று காணப்படுகிறது. பாண்டிய மன்னர்களால் 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது இக் கோயில். இக் கோயிலில் உள்ள கருவறையில் உள்ள சிவலிங்கம் அப்பாறையிலேயே நடுவில் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது. பல சிறப்புகள் உடைய இம் மலைத் தொடர்கள் அனைத்தும் கிரானைட் கற்கள் என்பதை அறியாமல் இருந்தவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது இவ் உண்மை தெரிய வர, அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்ட ஒரு சிலர், முதலில் இம்மலைகளை அரசு வசம் எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்தனர். அதற்குண்டான செலவுகளையும் அவர்களே ஏற்றனர்.

இதன் பின் அரசிடம் இருந்து அம்மலையை தங்கள் பெயருக்கு லீசுக்கு எடுத்தனர்.தற்போது ராமாயி மலையை வெட்ட தொடங்க, அப்பகுதி மக்கள் தாமதமாக எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். தற்காலிகமாக இப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷங்களான இம் மலைகளை பணத்திற்காக அழிக்க அரசே முன்வருவது துரதிஷ்டவசமானது. நிரந்தரமாக இப்பகுதியில் கற்களை வெட்ட தடை விதித்து அரசு இம்மலைகள் அனைத்தையும் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us