ADDED : ஜன 12, 2026 05:42 AM
திருமங்கலம்: அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளப்பதை உறுதி செய்யும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று அஷ்டமி சப்பர திருவிழா நடைபெறும்.
திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான மீனாட்சி, சொக்கநாதர், பிரியாவிடையுடன் எழுந்தருளினர். அவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு அஷ்டமி சப்பரத்தில் மீனாட்சி சொக்கநாதர் பிரியாவிடை எழுந்தருளினர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது.
பக்தர்கள் வழிநெடுக திருக்கண் வைத்து வழிபாடு செய்தனர். வழிபாடு செய்த பக்தர்களுக்கு அரிசி தானம் வழங்கப்பட்டது. சப்பரத்தின் பின்னால் அரிசியை சிவாச்சாரியார்கள் சாலையில் தூவி சென்றனர்.
ஏற்பாடுகளை தர்கார் சுசிலா ராணி, நிர்வாக அதிகாரி அங்கையர்கண்ணி செய்திருந்தனர். பூஜைகளை கோவில் சிவாச்சாரியார் சங்கரநாராயணன் செய்திருந்தார்.

