UPDATED : அக் 17, 2026 05:50 PM
ADDED : அக் 17, 2026 05:47 PM
நடக்கும் போது பெருவிரல் மூட்டில் அதிக வலி உள்ளது. ரத்தம் கட்டியது போல் வீக்கம் இருக்கிறது. இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது.–ப.முருகேசன், ராமநாதபுரம்.
ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதன் காரணமாக அதன் படிகங்கள் மூட்டுகளில் படியும். இதனால் ‘கவுட் ஆர்த்ரைட்டிஸ்’ எனும் ஒரு வகையான மூட்டு அலர்ஜி நோய் ஏற்படும். இதன் அறிகுறியாக பெருவிரல் மூட்டில் வலி, வீக்கம், ரத்தக்கட்டு போன்றவை தென்படும். சிலருக்கு கணுக்கால், முழங்கால் உள்ளிட்ட மற்ற மூட்டுகளிலும் பாதிப்பு ஏற்படுத்தலாம். விரைவில் எலும்பு தேய்மானம் அடையும். இதனால் தாங்க முடியாத அளவுக்கு வலி இருக்கலாம். இரவு நேரங்களில் வலி அதிகரிக்கும். யூரிக் அமிலம் அளவு அதிகமாக இருக்கும். அனைவருக்கும் இந்த நோய் ஏற்படாது. உணவுப் பழக்கத்தில் போதிய கவனம் செலுத்தாததால் இந்த நோய் வரும். உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு எளிதாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
மதுபானங்கள், கடல் உணவுகளை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம்.
–டாக்டர் ஆர்.கண்ணன், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்.––
