ADDED : ஏப் 11, 2026 09:39 PM
மதுரை: மதுரை கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரன் பிரசாரத்தில் இளைஞரணி துணைத்தலைவர் கணேசமூர்த்தி உட்கட்சி பூசலால் தாக்கப்பட்டார்.
காலை ஒத்தக்கடை - திருமோகூர் ரோட்டில் மகளிரணி ஏற்பாட்டில் மகேந்திரன் ஓட்டு சேகரித்தார். அப்போது அப்பகுதி பூத் பொறுப்பாளரும், இளைஞரணி துணைத் தலைவருமான கணேசமூர்த்தியும் உடன் சென்றார். பின்னர் மேலுார் ரோட்டில் காரியாலயம் திறப்பு விழாவிற்காக கணேசமூர்த்தி சென்றார். அங்கிருந்த ஒன்றிய செயலாளர் சேனாதிபதியின் ஆதரவாளர்கள் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர், 'ஒன்றிய செயலாளரை கேட்காமல் வேட்பாளருடன் ஏன் சென்றீர்கள்' என வாக்குவாதம் செய்தனர். அதில் ஒருவர் கணேசமூர்த்தியை தாக்கினார்.
இதுகுறித்து கணேசமூர்த்தியிடம் கேட்டபோது, ''17 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். காரியாலயம் முன்பு என்னை தாக்கினர். அப்போது வேட்பாளர் அங்கு இல்லை. ஆனால் அவருக்கு தெரிந்திருக்கும். இதுதொடர்பாக என்னிடம் அவர் விசாரிக்கவில்லை. ஆறுதல்கூட கூறவில்லை'' என்றார்.
இத்தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு இடையே ஜாதி ரீதியாக பாகுபாடு இருப்பதாகவும், அதன் வெளிப்பாடே கணேசமூர்த்தி தாக்கப்பட்டதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
