அடிப்படை வசதி, ஆசிரியர்கள் இல்லாத அரசு தொடக்கப்பள்ளி
அடிப்படை வசதி, ஆசிரியர்கள் இல்லாத அரசு தொடக்கப்பள்ளி
UPDATED : நவ 13, 2026 04:29 AM
ADDED : நவ 12, 2026 06:18 PM

சோழவந்தான்: ''விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகளை சீரமைத்து புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்'' என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இங்கு நாடக மேடை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இதில் மலையூர், நடுவூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகம் செடி, கொடிகள் அடர்ந்து புதராக காட்சியளிக்கிறது. மாணவர்களுக்கு போதுமான கழிப்பறை வசதியில்லை. ஏற்கனவே கட்டி கழிப்பறை சேதமடைந்துள்ளது.
சமூக ஆர்வலர் பால்பாண்டி கூறியதாவது: பல ஆண்டுகளாக இயங்கும் பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. ஒரேஒரு ஆசிரியரே மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். மாணவர்கள் விளையாடவும் வசதி இல்லை. இதனால் மாணவர்களின் கற்றல், ஒழுக்கத் திறன்களில் குறைபாடு ஏற்படுகிறது.
அடிப்படை வசதிகள் போதாமையால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை இங்கு சேர்க்க தயங்குகின்றனர். இது தொடர்ந்தால் பள்ளியை விரைவில் மூடும் நிலை உருவாகும். அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
