ADDED : நவ 11, 2025 03:55 AM
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 'நான் முதல்வன் -வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ் 26 நாட்கள் தேனீ வளர்ப்பு பயிற்சி நடக்கிறது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். தேனீக்களின் பயன்கள் குறித்து கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.,) மதுரை மண்டல இயக்குநர் செந்தில்குமார் ராமசாமி பேசியதாவது: கே.வி.ஐ.சி., சார்பில் தேனீவளர்ப்பு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து 10 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள தேனீ வளர்ப்பு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 55 வயதுக்குட்பட்டோர் பயன்பெறலாம். பயிற்சியை முடித்தவர்களுக்கு, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 35 சதவீதம் மானியத்துடன் தொழில்கடன் வழங்கப்படும் என்றார். உதவி இயக்குநர் செந்தில்குமார் பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடினார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஏற்பாடுகளை செய்தது. இணைப்பேராசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

