பெண் கல்வியை ஆழமாக வலியுறுத்திய பாரதிதாசன் பல்கலை பதிவாளர் பேச்சு
பெண் கல்வியை ஆழமாக வலியுறுத்திய பாரதிதாசன் பல்கலை பதிவாளர் பேச்சு
ADDED : மார் 10, 2026 06:09 AM

மதுரை: பெண் கல்வியை ஆழமாக வலியுறுத்தி, சமூக நீதியை நிலை நாட்டியவர் பாரதிதாசன் என மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) முத்தையா தெரிவித்தார்.
இப்பல்கலையில் தமிழியல்துறை, சென்னை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 'பாரதிதாசன் படைப்புகள் பன்முகப் பார்வை' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது.
துறைத் தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். தலைமை வகித்து முத்தையா பேசுகையில், சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும், பெண் கல்வி குறித்தும் தன் கவிதைகளில் ஆழமாக வலியுறுத்தியவர் பாரதிதாசன். காலத்திற்கு ஏற்ற கருத்துக்களை பாரதியும், பாரதிதாசனும் தெரிவித்தனர். அவர்கள் கண்ட கனவு நிறைவேறி வருகிறது. பாமரனுக்கும் புரியும் வகையில் நேரடி தமிழில் இருவரும் கவிதைகள் எழுதினர். சமூக நீதிக்கு வித்திட்டனர் என்றார்.
விழுப்புரம் மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் முதல் ஆய்வுக் கோவையை வெளியிட்டார். முத்தையா, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் சுசிலா பெற்றுக்கொண்டனர்.
முன்னாள் துணைவேந்தர் கருணாகரன், இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் முன்னாள் இயக்குநர் ராமமூர்த்தி, மயிலம் ஸ்ரீமத் பாலய சுவாமிகள் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு, தேனி சனீஸ்வர அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் பங்கேற்றனர்.
