ADDED : நவ 25, 2024 04:46 AM
அவனியாபுரம் : மதுரை அவனியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தனியார் நிதிமூலம் கூடுதல் கட்டடங்களுக்கான பூமி பூஜை நடந்தது.
தமிழக அரசின் நம்ம பள்ளி, நம்ம ஊரு பள்ளி திட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாடுவாழ் தமிழர் திலீப் பாபு, அவனியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள், 3 ஆய்வக கட்டடங்கள், ஆடிட்டோரியம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்
புதிய கட்டடங்களுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. திலீப்பாபு அவரது குடும்பத்தினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
திலீப்பாபு கூறுகையில், ''சிங்கப்பூர் வாழ் தமிழராக இருந்தாலும், நான் பிறந்து வளர்ந்தது தமிழகத்தில் தான். எனக்கு கல்வி கொடுத்ததும் தமிழகம் தான். அதனால் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கல்விக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் முதல் கட்டமாக திருநகர் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்ட ரூ. 1.40 கோடி வழங்கினேன். அவனியாபுரம் பள்ளிக்கு ஏற்கனவே ரூ. 13 லட்சத்தில் கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளேன்'' என்றார்.