ADDED : ஏப் 23, 2025 04:02 AM
திருநகர் : மதுரை தனக்கன்குளம் பகுதி நான்கு வழிச்சாலையில் விபத்து, இறப்பு தொடர்ந்து நடந்தது. இதை தடுக்க மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறியதாவது: இந்த ஆண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை அமையக்கூடிய இப்பகுதியில் மேம்பாலத்தின் அவசியம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் எடுத்துக் கூறி விரைவாக நிதி ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அவரும் ரூ. 43 கோடி ஒதுக்கீடு செய்தார். ஓராண்டுக்குள் இப்பணி நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
கள்ளிக்குடி
சூரக்கோட்டை மற்றும் கள்ளிக்குடி நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட விபத்துகளில் 25க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால் இப்பகுதிகளில் ரோட்டை கடக்க 'அண்டர் பாஸ்' பாலம் அமைப்பதற்கு பொதுமக்கள் சார்பில் அரசிடம் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. எம்.பி., மாணிக்கம் தாகூர் வலியுறுத்தலில் சிவரக்கோட்டையில் ரூ.27 கோடி, கள்ளிக்குடியில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை அவர் தலைமையில் நடந்தது.

