/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாவட்ட தலைவர் பதவிக்கு பா.ஜ., நிர்வாகிகள் தீவிரம்
/
மாவட்ட தலைவர் பதவிக்கு பா.ஜ., நிர்வாகிகள் தீவிரம்
ADDED : டிச 07, 2024 06:29 AM
மதுரை: மதுரையில் பா.ஜ., மாவட்ட தலைவர் பதவிகளுக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.
பா.ஜ.,வில் கிளை, மண்டல், மாவட்ட பதவிகளைப் பெற போட்டா போட்டி நிலவுகிறது. கட்சியில் கிளை அமைப்பு முதல் தேசிய தலைமை வரை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். மதுரை மாவட்டத்தில் கிளை அமைப்புகளில் சில மாதங்களாக நிர்வாகிகள் தேர்வு நடந்து முடியும் தருவாயில் உள்ளது. மண்டல் அமைப்புகளுக்கான தலைவர் தேர்வு நடக்க உள்ளது. தலைவரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு முடிந்தவரை அப்பகுதி நிர்வாகிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி தலைவரை தேர்வு செய்யும். போட்டி இருந்தால் தேர்தல் டிச.12 முதல் 15க்குள் நடத்தி முடிக்க உள்ளனர். அதன்பின்னர் மாவட்ட தலைவர், நிர்வாகிகள் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கும் தனிக்குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழு மாநில மையக்குழு, மண்டல் நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்டு தலைவரை நியமிக்கும். போட்டி இருந்தால் தேர்தல் நடக்கும்.
மதுரையில் இத்தேர்தல் டிச.15க்கு பின்னர் 20க்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் மதுரை தொகுதியில் பா.ஜ., கணிசமான ஓட்டுகளை பெற்று 2ம் இடத்தை பிடித்தது. இதனால் நிர்வாகிகளிடமும் பதவிகளைப் பிடிக்க போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. மதுரை வருவாய் மாவட்டத்தை பா.ஜ.,வினர் நகர், மேற்கு, கிழக்கு என 3 மாவட்டங்களாக பிரித்துள்ளனர். இதில் முறையே மகாசுசீந்திரன், சசிகுமார், ராஜசிம்மன் தற்போதைய தலைவராக உள்ளனர். இவர்களைத் தவிர மாவட்ட பார்வையாளர்களாக உள்ள ராஜரத்தினம், ஏ.ஆர்.மகாலட்சுமி, கார்த்திக் பிரபு உள்பட பலர் போட்டியில் இறங்கியுள்ளனர். அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 6 ஆண்டுகளாக கட்சியில் உள்ளவர்கள், சீனியர்கள், கிளைகளில் தீவிர உறுப்பினர்களாக இருந்து கட்சியை பலப்படுத்தியவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். இதனடிப்படையில் கட்சியினர் பதவிகளைப் பெற சென்னைக்கு படையெடுக்கின்றனர். நிர்வாகிகள் தேர்வு முடிந்து, பின்னர் தேசிய தலைமையில் இருந்து மாநிலம், மாவட்டம், மண்டல், கிளைகளின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்.