/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு
/
மதுரை வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு
ADDED : ஜன 26, 2025 05:38 AM
துாத்துக்குடி : மதுரை கோ.புதுார் லுார்துநகரை சேர்ந்த துளசிராஜன் மகன் சிந்துராஜ், 28, என்பவர் கடந்த 2020ல்மதுரை துளசி பவுண்டேஷன் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றார். திடீரென அவர் மாயமான நிலையில், 2023ல் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் சிந்துராஜின் மனைவி பானுப்பிரியா புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிந்துராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பானுப்பிரியாவுடன் ரவீந்திரன் நெருங்கி பழகியதை கண்டித்துள்ளார். இதனால், அவரை ரவீந்திரனும், அவரது நண்பரான துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தாலுகா அமலிநகரை சேர்ந்த கண்ணன், 53, என்பவருடன் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
உடலை காரில் எடுத்து வந்து திருச்செந்துார் அருகே மானாடு பகுதியில் உள்ள தேரிக்காட்டில் புதைத்துள்ளனர். ரவீந்திரன், கண்ணனை கைது செய்த மாட்டுத்தாவணி போலீசார் நேற்று தேரிக்காட்டு பகுதிக்கு அழைத்து வந்தனர். திருச்செந்துார் தாசில்தார் பாலசுந்தரம் முன்னிலையில் தேரிக்காட்டு பகுதியில் சுமார் 3 மணி நேர தேடுதலுக்குப் பின் சிந்துராஜ் புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
தேரிக்காட்டில் காற்று காரணமாக மணல் அவ்வப்போது இடம் மாறும் என்பதால் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சுற்றியிருந்த செடிகளை அகற்றிய நிலையில், அங்கு மனித எலும்புக்கூடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே இடத்தில் வைத்து டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். உடல் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்டதால் டி.என்.ஏ., சோதனை முடிவுக்குப் பிறகே முழு விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

