/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கச்சிராயிருப்பு பகுதியில் மழையால் இடிந்த பாலம்
/
கச்சிராயிருப்பு பகுதியில் மழையால் இடிந்த பாலம்
ADDED : நவ 02, 2025 03:43 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் சில நாட்களாக பெய்து வரும் மழையால் கால்வாய்ப்பாலம் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
அதே ஊரைச் சேர்ந்த செந்தில் கூறியதாவது:
இங்கு மயானம் செல்லும் வழியின் குறுக்கே நிலையூர் கால்வாயில் இருந்து மேலக்கால் கண்மாய் செல்லும் வரத்து கால்வாய் செல்கிறது. இதன்மீது பல ஆண்டுகளுக்கு முன் கல்பாலம் அமைக்கப்பட்டது.
தென்கரை முதல் மேலக்கால் வரை பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் தென்னை சாகுபடி நடக்கிறது.
விவசாய வேலைக்கு செல்லும் டிராக்டர் உள்பட கனரக வாகனங்களுக்கு இப்பாலமே பிரதானம். மயானம், வைகை, விவசாய பணிகளுக்கு செல்வோர் இப்பாலத்தையே நம்பியுள்ளனர்.
சில நாட்களாக பாலம் இடியும் நிலையில் இருந்தது. ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் அலட்சியம் காட்டினர். சில நாட்களாக பெய்யும் மழையால் பாலத்தின் ஒரு பகுதி தடுப்புச் சுவர் இடிந்து கால்வாயை மூடும் நிலையில் உள்ளது. பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும்போது விபரீதம் விளைய வாய்ப்புள்ளது.
மேலும் தெரு விளக்கு இல்லாததால் இரவில் நடந்து, டூவீலரில் செல்வோர் கால்வாய்க்குள் தவறி விழ வாய்ப்புள்ளது. இடிபாடுகள் கால்வாயை மூடியுள்ளதால் தண்ணீர் செல்ல வழி இன்றி தேங்கும் நிலை ஏற்படும்.
அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றார்.

