தீவிர விபத்து பிரிவு வளாகத்தில் 'பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மென்ட் வீக்'
தீவிர விபத்து பிரிவு வளாகத்தில் 'பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மென்ட் வீக்'
ADDED : பிப் 03, 2026 05:53 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை தீவிர விபத்து அவசர சிகிச்சை (டி.சி.சி.,) வளாகத்தின் பின்பக்க குழாய்களில் தண்ணீர் கசிந்து, கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
மூன்று மாடி கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து தண்ணீர் செல்வதற்கு பி.வி.சி., குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் 'வி' வடிவ இணைப்புகளில் தண்ணீர் கசிகிறது. 'ஏசி'யில் இருந்து வெளியேறும் தண்ணீரும் கசிவதால் சுவர் பாசி படர்ந்துள்ளது. இங்குள்ள 15 பி.வி.சி., குழாய்களில் ஐந்து குழாய்கள் வழியாக தண்ணீர் எந்நேரமும் சொட்டு சொட்டாக வெளியேறுகிறது.
குழாய்கள் மழைநீர் வடிகால் அமைப்புடன் முழுமையாக இணைக்கப்படவும் இல்லை. வெயில் காலத்திலேயே இப்பிரச்னை என்றால் மழைக்காலத்தில் சொல்லவே வேண்டாம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகள், ஆயிரம் வெளிநோயாளிகள் தினமும் சிகிச்சை பெறும் நிலையில் கட்டடத்தின் பின்பகுதியை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
பின்பகுதி ரோட்டில் 'பேவர்பிளாக்' கற்களை சரியாக பொருத்தாததால் மேடு பள்ளமாக டூவீலர் செல்ல முடியாத அளவு மோசமாக உள்ளது. பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. மருத்துவமனைக்கு தனியாக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு, எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவுகள் இருந்தாலும் அதிகாரிகள் இப்பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. கோடிகளில் கொட்டி கட்டுமானத்தை கட்டி சில ஆயிரங்களில் வீணாகும் பைப்களை பொருத்தி கட்டடத்தின் உறுதித்தன்மையை வீணாக்குவதால் யாருக்கும் பயனில்லை. தாமதமின்றி பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து தண்ணீர்க்கசிவை நிறுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
