/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கப்பலுாரில் புதைகுழி மாற்றுத்திருவிழா
/
கப்பலுாரில் புதைகுழி மாற்றுத்திருவிழா
ADDED : ஏப் 11, 2025 05:38 AM

திருமங்கலம்: கப்பலுாரில் பழமையான முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனித் திருவிழா நடைபெறும்.
இக்கோயிலில் திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் இருந்து புதைகுழி மாற்றுத் திருவிழா நடப்பது வழக்கம்.
இதில் நேர்த்திக்கடனாக குழி தோண்டி, அதில் பக்தர்களை புதைத்து, அவர்களை முத்தாலம்மன் தாண்டி வந்தால் நோய் நொடிகள் நீங்கும் என்பது ஐதீகம். அம்மன் கடந்து சென்ற பின் குழியில் இருப்பவர்கள் வெளியில் எடுக்கப்படுவர்.
பத்தாண்டுகளாக புதைகுழி தோண்டி, திருவிழா நடத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டது. இதனால் பக்தர்களை சாலையில் படுக்க வைத்து, அவர்களை அம்மன் தாண்டி வருவதுபோல் மாற்றி திருவிழாவை கொண்டாடுகின்றனர்.
இச்சூழலில் பங்குனித் திருவிழா நேற்று முன்தினம் அம்மன் கண் திறப்புடன் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.
நேர்த்திக்கடனாக ரோட்டில் படுத்து இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களை முத்தாலம்மன் தாண்டி கடந்து வந்தார். பின்னர் கப்பலுாருக்கு வெளியே சாமியை உடைத்தும், முளைப்பாரி கரைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று காளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பால் குடத்துடன் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். தொடர்ந்து தீர்த்தவாரி திருவிழா நடைபெறும்.

