/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எஸ்.ஐ.,தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
/
எஸ்.ஐ.,தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
ADDED : மார் 12, 2026 05:05 AM
மதுரை: போலீஸ் எஸ்.ஐ., நியமன எழுத்துத் தேர்விற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
தென்காசிமாவட்டம் சங்கரன்கோவில் குருசாமி, சங்குபுரம் ஆனந்தராஜா தாக்கல் செய்த மனு:
போலீஸ் எஸ்.ஐ.,பணி நியமன தேர்வு அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2025 ஏப்.4 ல் வெளியிட்டது. எழுத்துத் தேர்வு டிச.21 ல் நடந்தது. பங்கேற்றோம். பகுதி-1 தமிழ்த் தகுதித் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்களே அடுத்தகட்ட முதன்மை எழுத்துத் தேர்வில் பங்கேற்க தகுதியுடையவர்.
பகுதி -2 முதன்மை எழுத்துத்தேர்வில் பகுதி -'ஏ' (பொது அறிவு) மற்றும் பகுதி- 'பி' (உளவியல்) அடங்கும். மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இத்தேர்வில்25 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதனடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் திறன் தேர்வில் அனுமதிக்கப்படுவர்.
முதன்மை எழுத்துத் தேர்வு பகுதி- 'பி'யில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு தமிழ் மொழி தொடர்பான கேள்விகள் இடம்பெறவில்லை. பதிலாக உளவியல் தொடர்பான 10 வினாக்கள் இடம்பெற்றன.
ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். தேர்வானோரின் தற்காலிக தேர்வு பட்டியல் செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்வு முறையை பின்பற்றி வினாக்கள் கேட்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் மனுதாரர்கள் இருந்தனர். மாற்றத்தினால் மதிப்பெண்களை இழந்துள்ளனர்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீராகதிரவன், சிறப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ்குமார்:
பகுதி-1 ல் 100 மதிப்பெண்களுக்கு நடத்திய தமிழ்த் தகுதித் தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு ஒரு எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும் என்பது விதி. அதற்கு பாடத்திட்டத்தை நிர்ணயிக்க அல்லது ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கட்டாயமாக கேள்விகள் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை.
பாடத்திட்டத்தின் வரம்புக்குள் எவ்வகையான வினாக்களை சேர்ப்பது அல்லது நீக்குவது என்பது ஆட்சேர்ப்பு அதிகாரியின் விருப்பத்திற்குட்பட்டது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடந்த ஆண்டுகளில் தேர்வில் பின்பற்றப்பட்ட நடைமுறையே தற்போதும் பின்பற்றப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடவில்லை. பாடத்திட்டத்தை நிர்ணயிப்பது ஆட்சேர்ப்பு அதிகாரியின் அதிகாரத்திற்குட்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அதே தேர்வு முறை பின்பற்றப்படும் என எதிர்பார்க்க முடியாது.
சில தேர்வர்கள் ஏமாற்றமடைந்தாலோ அல்லது அதிருப்தி அடைந்தாலோ அல்லது தவறான வினா அல்லது தவறான பதிலால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கருதினாலோ, முழுத் தேர்வு நடைமுறையும் தவறானது என கருத முடியாது. இதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்வழக்கை விசாரிக்க விரும்பவில்லை. இருப்பினும் அறிவிப்பில் தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் தமிழ்வழி மூலம் கல்வி பயின்ற விண்ணப்பதாரர்களுக்கு ஆதரவளிப்பதாகும்.
இந்நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றும் வகையில், எதிர்காலத்தில் நடைபெறும் முதன்மை தேர்வுகளில் தமிழுக்கென தனித்துவமான கேள்விகளும் இடம்பெறுவது பொருத்தமானதாக இருக்கும். இப்பரிந்துரை எதிர்காலத்தில் வினாத்தாள் தயாரிக்கும்போது கருத்தில் கொள்ளப்படும் என இந்நீதிமன்றம் நம்புகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

