ADDED : மார் 12, 2026 05:03 AM
மதுரை: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி சாலையிலுள்ள இரட்டை தாழை முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த தாக்கலான வழக்கில் வனத்துறை செயலரை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி சாலையில் பழமையான இரட்டை தாழை முனீஸ்வரர் கோயில் உள்ளது. இது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் உபகோயில். கும்பாபிஷேகத்திற்காக 2020 ஆக.,30ல் பாலாலயம் நடந்தது. அதிலிருந்து 6 மாதங்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்க வேண்டும்.
இதுவரை நடவடிக்கை இல்லை. திருப்பணி வேலைகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தக்கோரி அறநிலையத்துறை கமிஷனர், ராமேஸ்வரம் கோயில் இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.
கோயில் தரப்பு: இது வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது. அத் துறையின் அனுமதியுடன்தான் திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்த முடியும் என தெரிவித்தது. நீதிபதிகள் தமிழக வனத்துறை செயலரை எதிர்மனு தாரராக சேர்க்க உத்தரவிட்டு மார்ச் 30க்கு ஒத்திவைத்தனர்.
