ADDED : பிப் 22, 2024 06:53 AM
மதுரை: கரூர் மாவட்டம் மலைக்கோவிலுார் மகாபலேஸ்வரர் கோயில் சொத்துக்களை மீட்க தாக்கலான வழக்கில் செயல் அலுவலரிடம் அரசு வழக்கறிஞர் விபரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: அரவக்குறிச்சி அருகே மலைகோவிலுாரில் மகாபலேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டது. இக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் தனிநபர் பெயர்களில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சொத்துக்கள் மூலம் கோயிலுக்கு வருவாய் இல்லை. இதனால் போதிய பணியாளர்களை நியமிக்க முடியவில்லை. சொத்து பதிவேடு இல்லை. சொத்துக்களை மீட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
மனுதாரர்: கோயிலில் அனுமதியின்றி உண்டியல் வைத்து 'ஜி-பே' மூலம் பணம் வசூலித்தனர்.
அரசு தரப்பு: கோயிலுக்கு சொந்த நிலம் இல்லை. கோயிலுக்கு சேவை புரிந்தவர்கள் பெயர்களில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்து, ஆர்.டி.ஓ.,விடம் மேல்முறையீடு செய்யப்படும். அனுமதியின்றி உண்டியல் வைத்தது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சியில் சிலர் வந்தது பதிவாகியுள்ளது. உண்டியலை போலீசார் அகற்றினர். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: கோயில் செயல் அலுவலரிடம் விபரம் பெற்று அரசு வழக்கறிஞர் பிப்.,26ல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.