/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொங்கல் பரிசு ரூ.ஆயிரத்தை வங்கியில் செலுத்த வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
பொங்கல் பரிசு ரூ.ஆயிரத்தை வங்கியில் செலுத்த வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பொங்கல் பரிசு ரூ.ஆயிரத்தை வங்கியில் செலுத்த வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பொங்கல் பரிசு ரூ.ஆயிரத்தை வங்கியில் செலுத்த வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 09, 2024 06:18 AM
மதுரை பொங்கல் பரிசு ரூ.1000 ஐ ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த தாக்கலான வழக்கில் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். அடுத்த ஆண்டு பொங்கல் பரிசுக்குரிய தொகையை நேரடியாக அல்லது வங்கி கணக்கில் செலுத்த விருப்பம் தெரிவிப்போரின் விபரங்களை தற்போதே அரசு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்புடன் பணமும் அடங்கிய பரிசுத் தொகுப்பை ரேஷன்கார்டுதாரர்களுக்கு சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது.
2024 ஜன.,15 பொங்கலையொட்டி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்திற்காக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. அதற்குரிய தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் (ஈ.சி.எஸ்., முறையில்) செலுத்த வேண்டும். அந்தந்த வட்டார கொள்முதல் குழுவிலுள்ள கூட்டுறவு விற்பனை சங்க வங்கி கணக்கு மூலம் செலுத்த வேண்டும்.
பணத்தை ரொக்கமாக வழங்கினால் அந்தந்த மண்டல இணைப் பதிவாளரே முழுப்பொறுப்பு என 2022 ல் கூட்டுறவுத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ஆனால் பல விவசாயிகளுக்கு வங்கி கணக்கு மூலம் கடந்த காலங்களில் தொகையை வழங்கவில்லை. கரும்பிற்கு நிர்ணயித்த விலையைவிட விவசாயிகளுக்கு குறைந்த தொகை வழங்கப்பட்டது. முறைகேடு நடந்தது. சில அதிகாரிகள், இடைத்தரகர்கள் பயனடைந்தனர்.
தற்போது கொள்முதல் செய்யும் கரும்பிற்குரிய தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பரிசு தொகுப்பு ரூ.1000 ஐ ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
வெள்ளை சர்க்கரை(சீனி)க்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என தமிழக கூட்டுறவுத்துறை செயலர், வேளாண்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு: பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் வினியோகம் துவங்கி 60 சதவீதம் முடிந்துள்ளது. ரூ.1000 ஐ வங்கி கணக்கில் செலுத்துமாறு யாரும் கோரிக்கை விடுக்கவில்லை.
வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டேகால் கோடி ரேஷன்கார்டுதாரர்களுக்கு வங்கியில் பணம் செலுத்துவதில் நடைமுறைச் சிரமங்கள் உள்ளன. கடந்தகாலங்களில் எவ்வித புகாரும் இல்லை. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வாய்ப்பிருக்கும்பட்சத்தில் மனுவை ஜன.,11 க்குள் தமிழக அரசு பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு பொங்கல் பரிசுக்குரிய தொகையை நேரடியாக அல்லது வங்கி கணக்கில் செலுத்த விருப்பம் தெரிவிப்போரின் விபரங்களை தற்போதே அரசு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.